குறும்பு செய்ததால் காட்டில் தனியாக விடப்பட்டு
காணாமல்போன ஜப்பானியச் சிறுவன்
ஒருவாரத்துக்கு பின்னர்
இன்று மீட்பு
குறும்பு செய்ததால் காட்டில் தனியாக விடப்பட்டு காணாமல்போன ஜப்பானியச்
சிறுவன் யாமாட்டோ பத்திரமாக மீட்கப்பட்டதாக ஜப்பான் ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
சுமார் ஒருவார காலமாக உறைநிலை குளிரில், கொட்டும் மழைக்கு இடையில் காட்டுக்குள் இரவு-பகலாக பசியுடன் சுற்றித்திரிந்த யாமாட்டோ, ஒருமலையை கடந்து மனம்போன போக்கில் நடந்துவந்தபோது, ஒரு பாழடைந்த கட்டிடம் அவனது கண்களில் தென்பட்டுள்ளது.
அந்த பாழடைந்த குடிசைக்குள் நுழைந்த அவன், அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு, தரைவிரிப்பின் மீது படுத்து உறங்கியுள்ளான். அது, அந்த பகுதியைச் சேர்ந்த ராணுவ சோதனைச் சாவடி என்பது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த யாமாட்டோவை மறுநாள் (இன்று) காலை ஒரு ராணுவ வீரர் பார்த்துள்ளார். அவனை எழுப்பி, நீ யாமாட்டோ தானே? என்று அந்த வீரர் கேட்டார். அவன் ‘ஆம்’ என்று சொல்ல சிறுவன் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி காட்டுத்தீப்போல தற்போது பரவி வருகிறது.
உடனடியாக, ஒகைடோ நகரிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட யாமாட்டோவுக்கு இழந்த சத்துக்களை சமன்படுத்துவதற்காக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவன் நல்லநிலையில் தைரியமாக இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
யாமாட்டோவை பரிசோதித்த டாக்டர்கள் ஒருவார காலம் பயத்துடன் சுற்றியதற்கான அடையாளமே அவனிடம் காணவில்லை என்று கூறியுள்ளார்கள். யாமாட்டோவின் தந்தை அவனை சந்தித்து கண்ணீருடன் மன்னிப்பு கேட்டபோது பரவாயில்லை என்பதுபோல் சுட்டித்தனமாக அவன் தலையை ஆட்டிவைத்தான்.
ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதியரின் மகன் யாமாட்டோ டனூக்கா(7). யமாட்டோவின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை தங்கள் மகனை வெளியே அழைத்துச் சென்றுவிட்டு, காட்டுப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தனர். அப்போது அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்துள்ளான். அவ்வழியேவந்த வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் சிறுசிறு கற்களைவீசி விளையாடியுள்ளான்.
இதனால் கோபமடைந்த பெற்றோர், அவனை தண்டிப்பதைப்போல் மிரட்டும் விதமாக கரடிகள் நிரம்பிய நடுக்காட்டில் யாமாட்டோவை தனியே விட்டுவிட்டு சென்று விட்டனர். பின்னர், ஐந்து நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது யாமாட்டோவைக் காணவில்லை. பின்னர், இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, ஹெலிகாப்டர்களில் நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் போலீசார் காட்டிற்குள் சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். 5 நாட்களாக தொடர்ந்து தேடியும் அவனை கண்டுபிடிக்க இயலாததால், மீட்புப் படையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் தேடும் பணியில் களமிறங்கினர்.
அந்த காட்டுப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் தேடும் பணி பாதிக்கப்பட்டது. சிறிய ஓடைகளை ஒட்டியுள்ள ஆழமான குகைகள் போன்ற எளிதில் நெருங்க முடியாத இடங்களில் சிறுவனை தேடுவதற்காக ஜப்பானின் தற்காப்பு படையினரை உதவிக்கு வரும்படி நானி நகர நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. யாமாட்டோவுக்கு என்ன ஆனதோ? என்ற பீதி ஜப்பான் நாட்டையும் கடந்து, உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் மூலமாக பரவியது.
0 comments:
Post a Comment