புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு!
மகளை கொன்ற தாய்க்கு விளக்கமறியல்
தாயால் அடித்துக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும்
21 வயதுடைய மகளின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை நீதவான்
நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் முன்னிலையிலேயே இந்தச் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்தியமுகாம்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அம்பாறை, மத்தியமுகாம் ஆறாம் பிரிவு 11ஆம் கொலனியில் 21 வயதுடைய மகளை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தாய்க்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில்; வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் இன்று (03) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோதே சந்தேக நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அம்மகளின் தாய் (வயது 55) நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டார்.
ஐந்து பிள்ளைகளின் இத்தாய், இவரின் ஐந்தாவது பிள்ளையான ஜனனியை கல்முனை வைத்தியசாலையில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இம்மகள் திருமணமாகி கணவரின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது கணவர் வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில் இந்துமதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு தனது மகள் மாறியுள்ளமை தொடர்பில் தாய் கேள்விப்பட்டுள்ளார்.
இவ்வாறிருக்கையில், கடந்த செவ்வாய்க்கிழமை (31) தனது தாயின் வீட்டில் தங்கிவிட்டு வருவதற்காக மகள் சென்றுள்ளார். அவ்வீட்டில் தனிமையில் வசித்துவரும் தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார். இந்நிலையில், மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மகளைக் காணவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணை மேற்கொண்டபோது, தாய் தனது மகளைக் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்தமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்தே அத்தாய் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.
0 comments:
Post a Comment