பம்பலப்பிட்டி கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப்

சுலைமானை கடத்தியவர் அவரது ஸ்தாபன ஊழியரே!

விசாரணைகளில் தெரியவந்துள்ளது



பம்பலப்பிட்டி கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் வர்த்தக ஸ்தாபனத்தில் நிதிக்கு பொறுப்பாக இருந்த நபரே, இரண்டு கோடி ரூபா கப்பம் கேட்டு அவரை கடத்திச் செல்லும் திட்டத்தை வகுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஃபாக்கீர் அஸ்லம் மொஹமட் என்ற இந்த நபர் கடந்த 8 வருடங்களாக வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானிடம் பணி புரிந்து வந்துள்ளார்.

வர்த்தகருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டதன் காரணமாக, அவரிடம் நிதிப் பொறுப்பையும் முஹம்மட் சகீப்  சுலைமான் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தனது எஜமானிடம் பெருமளவில் பணம் புழங்குவதை நன்றாக அறிந்து கொண்ட பின்னர், சந்தேக நபர் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார்.

இதனடிப்படையில் கப்பம் பெறுவதற்காக வர்த்தகரை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சந்தேக நபரின் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. வீட்டை புனரமைக்க வர்த்தகர் 5 லட்சம் ரூபா கொடுத்துள்ளதுடன் அவரது மனைவி மேலும் 50 ஆயிரம் ரூபாவை கொடுத்துள்ளார்.

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானை கடத்த ஒன்றரை மாதங்கள் திட்டமிட்டுள்ளனர். கடத்திச் செல்ல பயன்படுத்திய வாகனத்திற்கு ஒரு நாளுக்கு 34 ஆயிரம் ரூபாவை வாடகையாக செலுத்தியுள்ளனர்.

கடத்தலுடன் சம்பந்தப்பட்ட நபரது மனைவியின் தங்க ஆபரணங்களை அடகு வைத்தே இதற்கான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

வாகனத்தில் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் வர்த்தகரின் தலையில் தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு கோடி ரூபாவை கப்பமாக பெற வேண்டும் என்பதே கடத்தியவர்களின் நோக்கம் என்ற போதிலும் தலையில் தாக்கியதால், அவர் உயிரிழந்து விடுவார் என இவர்கள் எண்ணியிருக்கவில்லை.

வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்ட தினத்திற்கு மறுதினம் சந்தேக நபர் வர்த்தக ஸ்தாபனத்திற்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய வர்த்தகரின் தந்தை தனது மகனை விடுவிக்க பணத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கையில் சந்தேக நபர் அங்கு சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட 8 பேரில் 6 பேர் முஸ்லிம்கள் எனவும் சம்பவத்தின் பின்னணியில் இனவாத நோக்கங்கள் எதுவுமில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை குறுகிய காலத்தில் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top