சுவாதி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட
ராம்குமார் மின்கம்பியை
கடித்து தற்கொலை!
பொலிஸார் திட்டமிட்டு
என் மகனை கொலை செய்துள்ளனர்
- ராம்குமாரின் தந்தை
சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டார். முதலில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. குற்றவாளியை கண்டுபிடிப்பதில் பொலிஸார் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். ஏராளமான தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1 ம் திகதி சுவாதியை கொலை செய்ததாக கூறி ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரின் வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்த போது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.
ராம்குமார் தந்தை பேட்டி:
இந்த சம்பவம் தொடர்பாக ராம்குமாரின் தந்தை பரமசிவன் அளித்த பேட்டியில், " என்னுடைய மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. அவன் கொலையாளி அல்ல. அவன் உயிரோடிருந்தால் உண்மை எப்படியாவது வெளியில் வந்துவிடும் என்று பயந்து பொலிஸார் திட்டமிட்டு என் மகனை கொலை செய்துள்ளனர் " என்று தெரிவித்துள்ளார்.
ராம்குமாரின் தற்கொலை தொடர்பாக சிறைத் துறை வட்டாரங்கள் கூறியிருப்பதாவது:
ராம்குமார் மாலை 4.45 மணிக்கு தற்கொலைக்கு முயன்றார். சிறை சமையல் அறையில் இருந்த மின்கம்பியை வாயால் கடித்துள்ளார். மின் வயரை உடலிலும் செலுத்தியுள்ளார். இதை அறிந்ததும், ராம்குமாருக்கு சிறையில் முதலுதவி அளிக்கப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளை பிரேத பரிசோதனை:
உயிரிழந்த ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நாளை பிரேத பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சம்பவம் தொடர்பாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் கூறுகையில் " ராம்குமாரை நேற்று நான் சிறைக்கு சென்று பார்த்தேன். அவன் நலமாக தான் இருந்தான். எந்தவித மன அழுத்தத்திலும் அவன் இல்லை. சிறை அதிகாரி விஜயகுமார் இருந்தவரை ராம்குமார் பாதுகாப்பாக தான் இருந்தான். அவர் இன்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராம்குமார் இறப்பில் மர்மம் உள்ளது. அவன் உடலை பார்க்க பொலிஸார் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கில் தீர்வு கிடைக்க சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment