என் மகனைக் கொன்று விட்டார்கள்

இறந்த ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறல்!



என் மகனைக் கொன்று விட்டார்களே என சுவாதி கொலை வழக்கில் கைதாகி இன்று சிறையில் இறந்த ராம்குமாரின் தந்தை பரமசிவன் கதறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

அவருக்காக வழக்கறிஞர் ராம்ராஜ் என்பவர் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், ராம்குமார் இன்று மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக புழல் சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதும் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

அந்த கிராமத்துக்கு செய்தியாளர்கள் சென்றதும், உள்ளூர் மக்கள் அவர்களை உள்ளே விடவில்லை.

எதற்காக இங்கே வந்தீர்கள்... சுவாதி வீட்டுக்கு சென்று இதுவரை அதனை பதிவு செய்தீர்களா? ராம்குமார் ஒரு அப்பாவி.. அவனுக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை.

அவனைக் குற்றவாளி ஆக்கி கைது செய்தது போதாதா?.. இப்போது அவனைக் கொலை செய்து விட்டீர்களே.. சுவாதி வீட்டுக்கு சென்று அவங்க குடும்பத்தினரிடம் பேட்டி எடுங்கள்.. எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?’ என ஆவேசத்துடன் விரட்டி அடித்தனர்.

வழக்கறிஞர் ராம்ராஜ் உதவியுடன், ராம்குமாரின் தந்தை பரமசிவத்திடம் பேசினோம். அவரது குடும்பமே சோகத்தில் இருந்தது ராம்குமாரின் தாயார் மற்றும் இரு சகோதரிகள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் இருந்தது.

ராம்குமாரின் தந்தை பரமசிவன் பேசுகையில், ‘என் மகனுக்கும் இந்த கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை. சிறையில் அவனை சந்தித்த ஒவ்வொரு நாளும் என்னிடம், ‘அப்பா... நான் இந்த கொலையை செய்யலை. ஆனால், ஏதோ சதியால் என்னை சிக்க வைச்சிருக்காங்க.

விசாரணையில் உண்மை தெரியவரும். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க. உண்மை சீக்கிரம் வெளியே தெரிய வரும்னு சொல்லிக்கிட்டே இருந்தான். நானும் அவன் சொன்னதை நம்பியே இருந்தேன்.

என்னோட குடும்பமே இந்த வழக்கு விசாரணையை எதிர்பார்த்து இருந்துச்சு. அவன் விடுதலையாகி வருவான்னு நம்பி இருந்தோம். அவனுக்கும் சுவாதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்கும் எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக தெரியும்.

ஆனால், அவனை இந்த வழக்கில் சிக்க வைக்க அரசுத் தரப்பில் தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்க வழக்கறிஞர் ராம்ராஜ் இதில் இருந்து விலகிட்டதாக பொய்யான வதந்தியை கிளப்பி, அவருக்கும் எங்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செஞ்சாங்க.

அப்போது கூட இந்தளவுக்கு நடக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், இப்போது என் மகனை அரசும் காவல்துறையும் சேர்ந்து கொலை செஞ்சு இருக்காங்க. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்காங்க என்பது எனக்கு தெரியாது.

என் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவனைக் கடைசியாக சந்தித்தபோது கூட, ‘அப்பா நீங்க தைரியமா இருங்க. நான் நிரபராதியா வெளியே வருவேன். கவலைப்படாதீங்க. அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் இதை சொல்லுங்கனு சொன்னான்.

அதற்குள் இப்படி ஒரு தகவலை போலீஸார் எனக்கு தெரிவிச்சு இருக்காங்க. இதில் சதி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை.


ஆனால், அரசே இப்படி ஒரு செயலை செஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. என் மகனின் மரணத்தில் நடந்த உண்மையை அரசு வெளிப்படுத்தியே தீர வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன் என்றார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top