சாய்ந்தமருதிலுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா

சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ப
சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்

சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை


கல்முனை மாநகர சபையின் கண்கானிப்பில் உள்ள சாய்ந்தமருது தலைவர் அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா ( பீச் பார்க்) இரவு நேரத்தில் வெளிச்சம் எதுவுமின்றி சகாரா பாலைவனத்தில் அமைக்கப்பட்டது போன்று பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், குப்பைகளும் மிருகங்களின் கழிவுகளும் நிறைந்து அசிங்கமான ஒரு நிலையில் இருந்து கொண்டிருப்பதாகவும் பொது மக்களால் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டாக்காலி நாய்கள்,ஆடுகள், மாடுகள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இந்த தலைவர் அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா (பீச் பார்க்) மாறியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறு குழந்தைகள், பிள்ளைகள் ஓடி விளையாடுவதற்கென பெரும் தொகைப் பணம் செலவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா சிறு வயதினரின் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் இடமாகக் காட்சி தருவதாகவும் கல்முனை மாநகர சபையால் இது விடயம் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்டது போன்று காணப்படுவதாகவும் இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகர சபையிலுள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துப்பரவு செய்யும் ஊழியர்களை ஒரு ஒழுங்கு முறையில் நாளாந்தம் அனுப்பி இப் பீச் பார்க்கில் உள்ள குப்பைகள், அசிங்கங்கள் என்பவற்றை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது இப்படியிருக்க, மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே! நடத்துநர்களும் நாங்களே!! என்று கூறுபவர்கள், மத்திய அரசில் அமைச்சர், பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர். மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்போரின் (முஸ்லிம் காங்கிரஸ்) ஆதரவாளர்கள், அபிமானிகள் பெரும் எண்ணிக்கையில் வாழும் சாய்ந்தமருது மக்களின் குழந்தைகளுக்காக தலைவர் அஷ்ரஃப் அவர்களின் பெயரை வைத்துள்ள சாய்ந்தமருதிலுள்ள அஷ்ரஃப் ஞாபகர்த்த சிறுவர் பூங்காவை நவீனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இல்லை என இப்பிரதேச மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதிலுள்ள அஷ்ரஃப் ஞாபகர்த்த சிறுவர் பூங்கா சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ப சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என சாய்ந்தமருது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top