நல்லாட்சிக்கு தோல்வியாம்

மஹிந்தவுடன் இணைவதற்கு அழைப்பு விடுக்கிறார்

.எச்.எம் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சென்ற தேர்தலில் 98 வீதமான முஸ்லிம்கள்  நல்லாட்சியை உருவாக்குவதற்கு வாக்களித்தார்கள் என்று கூறுகின்ற முஸ்லிம் அமைச்சர்கள், இன்று கொத்தடி அடிமைகளாக அந்த அரசில் குந்திக் கொண்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே அண்மையில் ஏற்படவிருக்கின்ற மஹிந்த தலைமையிலான அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சமுதாய நலனுக்காக வேண்டி  பாடுபட முன்வர வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி அவர்களை மிக வாஞ்சையோடு அழைக்கின்றது.
 பொரளை நவம் மாவத்தையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் முஸ்லிம் முற்போக்கு முன்ணிகளின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான .எச்.எம். அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
 மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தில் சமுதாயத்துக்கு பல குறைகள் நடந்ததென்பதை அவராகவே ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமல்ல, அதனை மிகவும் தெளிவாக  வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் இப்படியானதொரு நிலை முஸ்லிம்களுக்கு வரவிடமாட்டேன் என்று உறுதி மொழி வழங்கியுள்ளார். எனவே எதிர்கால முஸ்லிம் நலனை முன்னிட்டு ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு இப்பொழுதே உதவி வழங்குவதன் மூலம் சமூதாயத்திற்கு நல்ல பல நன்மைகளை செய்து கொள்ள அரிய வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது.
இந்த அளுத்கமை அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகு பொதுபல சேனாவை தடை செய்ய வேண்டுமென தாம் அமைச்சரவையில் கூறிய போது அதற்கெதிராக அப்படி ஒன்றும் செய்யக் கூடாது. அப்படி தடை விதித்தால் பௌத்த பிக்குமாரும் சிங்களவர்களும் பாதையில் இறங்குவார்கள் என்று பாட்டலி சம்பிக ரணவக அந்த அமைச்சரவையிலிருந்து அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அதற்கு ஆதரவாக அன்றைய அமைச்சரவையில் மீன் பிடி நீரியல் வள அமைச்சராகவிருந்த ராஜித சேனாரத்னவும் ஆதரவாகப் பேசியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ இப்போது மறைக்கப்பட்டிருந்த உண்மைகளை மனந்திறந்து வெளியுலகிக்குச் சொல்லியுள்ளார்.
எனவே உண்மையிலேயே இதன் பின்னணியல் இருந்து செயற்பட்டது வெளிநாட்டு சக்திகளுடன் கூடிய பொதுபல சேனாதான். ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவே இந்த உண்மையைச் சொல்லியிருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவர் பத்திரிகைக்கு வழங்கிய ஓரு குறிப்பை எடுத்துக் காட்டிப் பேசிய அஸ்வர், மஹிந்த ராபக்ஷவை பதவியிலிருந்து இறக்குவதற்கு வெளிநாட்டு சக்திகளின் உதவியோடு பொதுபல சேனா ஈடுபட்டிருக்கிறது என அவர் கூறியிருக்கின்றார். எனவே மஹிந்த ராஜபக்ஷ கூறுவதற்கு முன்பே ஏப்ரல் மாதம் டிலான் பெரேரா கூறியிருக்கின்றார்.
இப்பொழுதுதான் உண்மையன நிலை முஸ்லிம்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இப்பொழுது உள்ள நிலையில் முஸ்லிம்கள்  வர்த்தகம் மற்றும் அனைத்துத்துறைகளிலும் மிகவும் வீழ்ச்சியடைந்தவர்களாக வர்த்தகர்கள் கவலைப்படுகின்றார்கள்.  60க்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் புனித தலங்களுக்கு இந்த அரசாங்கத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை நாங்கள் பதிவேடு செய்திருக்கிறோம்.
வில்பத்து சரணாலயம் சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னாரிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு அநாதைகளாக தனது சொந்த இருப்பிடங்களை விட்டு புத்தளத்திற்கு வந்து சேர்ந்த  இடம் பெயராளர்கள் பற்றிய  எனக்குள்ள அக்கறை வேறு யாருக்கும் இருக்க முடியாது. நான் தான் அன்று முஸ்லிம் விவகார அமைச்சராக ஆர். பிரேமதாஸவின் தலைமையில்  செற்பட்டேன்அப்போது புத்தளம் வாழ் மக்களோடு அவர்களை வரவேற்று தற்காலிக குடிசைகளை அமைத்து  உதவி செய்தோம்அப்போது வேறு எந்த முஸ்லிம் அமைச்சரும் இருக்கவில்லை. முன்னாள் புத்தளம் நகரசபைத் தலைவர் பிஸ்ருல் ஹாபி அத்தோடு, கல்பிட்டி நகரசபைத் தலைவர் உஹத்  முஹம்மத் உட்பட அவர்களது தலைமையில் ஏராளமான புத்தளம் வாழ் முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.
எனவேதான் புத்தளத்தை வந்தவர்களை வாழ வைத்த பூமி என என்றும் அழைத்து வருகின்றேன். எனவே இப்பொழுது உள்ள நிலையில் புத்தளத்திற்கு வடக்கே  வணாத்த வில்லு, பூகோளம் என்ற பகுதிகளுக்கு அப்பாலுள்ள காணிகளில் பூர்விக முஸ்லிம் குடியிருப்புகள்  இருந்ததற்கான அத்தாட்சிகள் ஏராளமாக இருக்கின்றன. புத்தளத்திற்குப் பொறுப்பாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் மறிச்சுக்கட்டி வரை சென்ற அனுபவம் எனக்கு இருக்கின்றது - என்றும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார், மௌலவி முபாறாக் அப்துல் மஜீத், ஆஷிக் கபூர், மல்வானை உஸ்மான் ஹாஜியார், இல்யாஸ் ஹாஜியார் உட்பட பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top