வில்பத்து விவகாரத்தில் ஹக்கீமின் அறிவிப்பு

வரவேற்கத்தக்கது

                                         -    ஏ.எச்.எம் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


காலஞ்சென்றாவது ஞானம் பெறுவது மிக நன்று. வில்பத்து விடயத்தில் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கின்ற மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுத்து எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளதை நாம் வரவேற்கின்றோம் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரீ ஹஸன் அலி கூறியிருப்பது போன்று முஸ்லிம்கள் விடயத்தில் தனிப்பட்ட அபிலாஷைகளை உதறித்தள்ளிவிட்டு சமுதாயத்திற்காக வேண்டி உழைப்போம் என்று அவர் கூறியுள்ளதை நாம் பாராட்டத்தான் வேண்டும். ஏனெனில் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் எதிர்காலத்தில வரவிருக்கின்ற அரசியலாக இருந்தாலும் முஸ்லிம்கள் சம்பந்தமான விடயங்களில் அனைவரும் ஒன்று கூடி தமது கோபதாபங்களை விட்டுவிட்டு சமுதாயத்தின் நலன் காக்கும் விடயங்களில் அனைவரும் ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டும். தமிழ் சமுதாயம் இப்படிச் செய்து அதன் மூலமாக வெற்றியையும் கண்டுள்ளார்கள்.
அதேபோன்று முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களுடைய சகோதரத்துவ அத்திவாஸ்த்தம் அவர்கள் மனதில் மேலோங்கி வரவேண்டும். முஸ்லிம்களைப் போன்று சகோதரத்தில் பிணையப்பட்ட ஒரு சமுதாயம் உலகத்தில் இல்லை. எனவே அனைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள் என்பதை அல் - குர்ஆன் அழுத்தமாகக் கூறுகின்றது. இப்போது அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சகல தரப்பினருக்கும் நல்ல சூழ்நிலை பிறக்கும். இது முஸ்லிம்களுடைய உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய விடயமாக உள்ளது.
 எனவே வில்பத்து சரணாலயம் கட்டாயம் கடிதம் மூலம் எழுதிப் பிரகடனப்படுத்தி அதற்கப்பால் உள்ள காணிகளை வேண்டியளவுக்கு முஸ்லிம்களுக்கு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, அவர் அவ்வாறு எழுதி உறுதியாகக் கொடுத்த கடிதத்தின் பிரதிகள் இப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அகில இலங்கை மக்கள் கட்சித் தலைவரும் அடிக்கடி சொல்வது என்னவென்றால் நாங்கள் சொல்வதை அரசாங்கம் கேட்பதில்லை. செவி சாய்ப்பதில்லைஎனவேதான் நாங்கள் கூறுகின்றோம் இது நீங்கள் ஏற்படுத்திய அரசாங்கம். 98 சதவீதமான முஸ்லிம்கள் வாக்களித்து ஏற்படுத்திய அரசாங்கம் என்று நீங்கள் உலகறிய சொல்லியிருக்கின்றீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் சொல்வதை அரசாங்கம் கேளாமலிருப்பது முழு நாட்டு முஸ்லிம் சமுதாயத்தினுடைய சேவைகளையும் உதாசீனப்படுத்தி உதறித்தள்ளும் ஒரு விடயமாகும் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எனவே சமுதாய நலன் காக்க அனைவரும் ஒன்று படுவோம் என்றும் அஸ்வர் மேலும் குறிப்பிட்டார்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top