கல்முனையில் இடம் பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட நற்பிட்டிமுனை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை தற்காலிக கட்டிடத்திற்கு இடம் மாற்றியமையைக் கண்டித்து இன்று 9 ஆம் திகதி திங்கள் கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்தியத்தின் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கட்டடத்தின் முன்னால் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பினால் அதன் தலைவர் சீ.எம்.ஹலீம் தலைமையில் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



'2014ஆம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் திட்டத்தின் கீழ், நற்பிட்டிமுனையில் 20 இலட்சம் ரூபாய் செலவில்   நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் இயங்கிவந்த இந்த  வைத்தியசாலையானது  கடந்த 06  மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது.
தற்போது அவ்வைத்தியசாலையானது எங்கு இயங்குகின்றது என்பது கூடப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்றோரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
113 பொதுமக்களின் கையொப்பங்களுடன்  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்கெனவே  முறைப்பாடு செய்திருந்தோம். அது தொடர்பில் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியபோது, அவ்வைத்தியசாலைக் கட்டடம் 2016ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ளது. அதற்காக அவ்வைத்தியசாலை வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வைத்தியசாலைக் கட்டடப் புனரமைப்புக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டுப் பட்டியலிலிருந்து  அறிய முடிகின்றது, அதேவேளை, அவ்வைத்தியசாலைக்கான புனரமைப்புப் பணி இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை' என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top