பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த
ஹிந்தி நடிகர் ஓம் புரி இன்று
காலை காலமானார்
பிரபல ஹிந்தி நடிகர் ஓம் புரி, மாரடைப்பால் காலாமானார். அவருக்கு வயது 66. மும்பையில் அந்தேரி பகுதியில் வசித்து வந்த ஓம் புரிக்கு இன்று(ஜன., 6-ம் திகதி) காலை திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
1950-ம் ஆண்டு அக்., 18-ம் திகதி ஹரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்தவர் ஓம் புரி. சினிமாவில் உள்ள ஆர்வத்தால் புனேயில் உள்ள பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்தவர் அப்படியே தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து பயிற்சியும் பெற்றார்.
1976ம் ஆண்டு ‛காசிராம் கொட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‛‛ஆக்ரோஷ், டிஸ்கோ டான்சர், அர்த் சத்யா, குப்த், சிங் இஸ் கிங், மேரே பாப் பெகலி ஆப், ரோட் டூ சங்கம், தி ஹேங்மேன், டான் 2, அக்னிபத், டர்ட்டி பாலிடிக்ஸ்'' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி தவிர்த்து பஞ்சாபி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார், சினிமா மட்டுமல்லாது ‛பாரத் ஏக் கோச், செகண்ட் ஜெனரேஷன்' உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, ‛ஆரோகன் மற்றும் அர்த் சத்யா' படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருது, பிலிம்பேர் விருது, சர்வதேச விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் . ஓம் புரி 1993-ம் ஆண்டு நந்திதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். 20 ஆண்டுகளில் இவர்களது திருமண வாழ்வு கசந்து போக இருவரும் 2013-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஓம் புரிக்கு இஷான் என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார்.
ஏராளமான திரை பிரபலங்கள் டுவிட்டர், பேஸ்புக்கில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment