நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த

எச்.எம். பாயிஸ்

இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு.
பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன்.
1989 முதல் 1998 வெளியான  இஸ்லாமிக் பேர்ஸ்பெக்டிவ் என்ற ஆங்கில தமிழ் மொழிப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணி புரிந்த ஹனிபா முஹம்மத் பாயிஸை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் இணைத்ததன் மூலம் அவருடனான தொடர்பு ஏற்பட்டது.
1963 மே 22ஆம் திகதி கொழும்பு கொம்பனித் தெருவில் மர்ஹும் அல்லாப்பிச்சை முஹம்மத் ஹனிபா பக்கீர் பதிலா உம்மா தம்பதியினரின் நான்காவது மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு - 02 ரீ.பி. ஜாயா மகாவித்தியாலயத்தில் கற்று ஜீ.சீ.. சாதராணதரப் பரீட்சையில் சித்திபெற்று பின்பு கொழும்பு சாஹிராக் கல்லூரியில் இணைந்து .பொ. உயர்தர வகுப்பில் இணைந்து ஆங்கில மொழி மூலம் தேறி பின் திறந்த வெளிப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டம்பெற்று பின் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் ஊடாகத் துறையில் முதுமாணிப் பட்டத்தை பூரணப்படுத்தியுள்ளார். பத்திரிகைத்துறையிலும் டிப்ளோமா பெற்றுள்ளார்.
ஊடகத்துறைக்கு மேலதிகமாக கணக்காய்வுத் துறையிலும் கற்ற பாயிஸ் சலாகா நிறுவனம் மற்றும் செல்மார் நிறுவனம் ஆகியவற்றில் 1982 முதல் 1989 வரை கணக்காளராகப் பணி புரிந்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் இணைந்தது முதல் முஸ்லிம் சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மர்ஹும் பாயிஸ் 2008 முதல் இறப்பதற்கு சில மாதங்கள் முன் வரை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் நிர்வாகச் செயலாளராகப் பணிபுரிந்தார். இந்த அமைப்பின் வளர்ச்சியில் பாயிஸின் பங்களிப்பு அளப்பரியது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் கடந்த சில வருடங்களாக நாட்டின் அச்சு ஊடகங்களில் முஸ்லிம்களுக்கெதிராக வரும் விடயங்களைக் கண்காணிப்பதற்காகடுருத் பக்டர்” (கூணூதt ஊஞுஞிணிணூடிதூ) என்ற சேவையை ஆரம்பித்தது. அதில் மும்மொழி ஆற்றல்மிகு பாயிஸின் பங்களிப்பு அளப்பரியது. இதனை பலவருடங்கள் பொறுப்பாக நின்று நடத்தினார்.
தௌஹீத் இயக்கத்துடன் தொடர்புபட்டிருந்த மர்ஹும் பாயிஸ்இல்ம்அஹதியா பாடசாலையின் அதிபராக 1985 முதல் 1987வரை பணி புரிந்துள்ளதோடு, இஸ்லாமிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக 1985 முதல் 1999 வரை பணி புரிந்துள்ளார். அத்தோடு, சர்கல் இன்சிடியுட் என்ற கல்வி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மற்றும் மருதானை தொழில்நுட்பக் கல்லூரியின் வருகை தரு வரிவுரையாளராகவும் பணி புரிந்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சியில் பாயிஸின் பங்களிப்பு விசேடமானது. உதவிப் பொருளாளராக பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், தொடர்ச்சியாக மூன்று முறை பதவிக் காலத்தில் அமைப்பின் பொருளாளராகப் பணி புரிந்துள்ளார்.
உத்தியோகப்பற்றற்ற வகையில் அமைப்பின் நிர்வாகச் செயலாளராகவும் பணி புரிந்ததோடு, இவர் அமைப்பின் உத்தியோகபூர்வ வெளியீடான மீடியாவின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். அமைப்பு நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மற்றும் உயர்தர மாணவர்களுக்காக நடத்திவரும் 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் பிரதான வளவாளர்களுள் ஒருவராகப் பணிபுரிந்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கொண்டாடிய 20ஆவது ஆண்டு நிறைவு விழாவின் வெற்றியில் கூடுதலான பங்களிப்பு பாயிஸினைச் சாரும். இரவு பகலாக உழைத்து அந்த விழாவினை வெற்றிகரமாக அமைப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு அதனையிட்டு அமைப்பு வெளியிட்டகூர்முனைஎன்ற நினைவு மலரின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை இலகுவில் மறந்து விட முடியாது.
சகோதரர் பாயிஸ் நாட்டின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக காலத்துக்கு காலம் ஊடக அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் நடாத்திய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக கடந்தாட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் அவர் பங்குபற்றியதோடு, ஏழு ஊடக அமைப்புக்களின் கூட்டிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 2016 இல் ஹைதராபாத்தில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டதோடு, காயல் பட்டிணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய உலக தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
இஸ்லாமிய பற்றாளரான சகோதரர் பாயிஸ் எங்களுடன் இணைந்திருந்த காலங்களில் தான்பின்பற்றும் கொள்கையை எவருக்கும் திணிக்க முற்படாத ஒரு செயற்பாட்டாளராவார்.
தனக்கு மிகப்பெரும் ஆளுமைகள் இருந்தும் அவற்றை பிரசித்தப்படுத்தாது அமைதியான முறையில் சமூகப்பணிபுரிந்த ஒருவராக நான் அவரைக் காண்கிறேன்.
சகோதரர் பாயிஸிடம் காணப்பட்ட பல சிறப்பம்சங்கள் காரணமாக முஸ்லிம் மீடியா போர அங்கத்தவர்களிடையே அவருக்கு விசேட மதிப்பும் கௌரவமும் காணப்பட்டது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உத்தியோகத்தர் தெரிவுக்காக நடத்தப்பட்ட தேர்தல்களில் அவர் பலமுறை பெரும்பான்மை வாக்குகளினாலும் இருமுறை போட்டியின்றியும் தெரிவு செய்யப்பட்டார். பணிவு, நேர்மை, மற்றவர்களை மதிப்பது, எவரதும்  மனம் நோகாமல் நடப்பது பாயிஸிடம் காணப்பட்ட சிறப்பம்சங்களாகும். தனது கல்வித் தகைமைக்கு ஏற்ப உயர்ந்த இடங்களில் பணிபுரியும் ஆற்றலிருந்த போதும் இஸ்லாமிய ஷரியத்தைப் பேணும் நிறுவனங்களாக இல்லாததன் காரணமாக சாதாரண சம்பளத்துடன் முஸ்லிம் அமைப்புக்களில் அவர் பணிபுரிந்தார்.
1994ஆம் ஆண்டு ரிஸ்னா கனி என்ற யுவதியைத் திருமணம் செய்த சகோதரர் பாயிஸ் மனைவியையும் தனது மூன்று பிள்ளைகளான அஷ்பக் அஹ்ஸன், அஸ்கா பாயிஸ், அர்சக் ஆகியோரைப் பிரிந்து கடந்த நவம்பர் 18ஆம் திகதி இவ்வுலகைப்விட்டுப் பிரிந்தார். 53 வருடங்களே வாழ்ந்த பாயிஸின் மறைவு சமூகத்துக்கும் குறிப்பாக முஸ்லிம் ஊடகத்துறைக்கும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் சேவைகளை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கம் கிடைப்பதற்குப் பிரார்த்திப்போமாக!
என்.எம். அமீன்
தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம்
மீடியா போரம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top