கல்முனை மாவட்டம் தொடர்பாக

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில்

குறிப்பிடாமல்  கை கழுவியிருக்கும் நிலையில்

பிரதி அமைச்சர் ஹரீஸ் அதற்காகப் போராட்டம்

பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சபதம்



கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று, புதிய அரசியலமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் முன்மொழிவொன்றினை சமர்ப்பித்திருந்த போதும், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் அது சேர்க்கப்படாமல் போயுள்ளதாக, பிரதியமைச்சரும் முஸ்லிம்.காங்கிரஸின்ன் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு நிகழ்ச்சியில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் கரையோர மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இலங்கையிலுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், கரையோர மாவட்டத்தை முஸ்லிம்.காங்கிரஸ் ஏன் கோரவில்லை என்று, நிகழ்ச்சி நடத்துநர் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே, பிரதியமைச்சர் ஹரீஸ் மேற்கண்ட பதிலை வழங்கினார்.
எவ்வாறாயினும், பிரதியமைச்சர் ஹரீஸ் கூறுவது அப்பட்டமான பொய் என்று, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அடித்துக் கூறினார்.
இந்த அரசியல் அறிக்கை பிரதமர் தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்பந்தன் ஐயா, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா போன்றவர்கள் பலமுறை கூடி எடுக்கப்பட்ட இடைக்கால அறிக்கைதான் இந்த அரசியல் மாற்ற அறிக்கை.
இந்த அறிக்கை இறுதியாக வடிவமைக்கப்பட்ட பிறகு குழுவில் கலந்து கொண்ட எல்லோருக்கும் இந்த அறிக்கைக்கு நீங்கள் உடன்படுகின்றிர்களா? இல்லையென்றால் உங்களின் கருத்துக்களைத் தாருங்கள் என்றும் கேட்கப்பட்டது. அவ்வாறு கேட்கப்பட்டபோது அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவருடைய கட்சியின் நிலைப்பட்டையும் நிமால் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டையும் அதேபோன்று சுமந்திரனும் சம்பந்தன் ஐயா அவர்களும் அவர்களின் நிலைப்பாட்டையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எங்கள் கட்சியின் நிலைப்பட்டையும் கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலதிகமாக நாங்கள் வடக்குடன் கிழக்கு இணையக்கூடாது, கல்முனை மாவட்டம் அது எங்களால் ஏற்கனவே ஒலுவில் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கரையோரம் என்பதை தவிர்த்து அதனையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டு கொடுத்திருக்கின்றோம். வடக்கு, கிழக்கு பிரிப்புக்கான நியாயங்களை நாங்கள் அதில் தெரிவித்துள்ளோம். காணி அதிகாரத்தை ஏன் வழங்க வேண்டும் வழங்கக்கூடாது என்பதை முல்லைதீவில் வடக்கு மாகாண சபை நடந்து கொள்ளும் முறையை நாம் உதாரணம் காட்டியுள்ளோம்.
இவ்வாறு அரச காணி, மாகாண ஆளுநரின் அதிகாரங்கள், இரண்டாவது சபை, தேர்தல் முறை ஜனாதிபதியின் அதிகாரங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் எங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல முன் மொழிவுகளை வழங்கியுள்ளது.
எங்களால் 4 கட்சிகளுடன் ஒன்றிணைந்து முன் வைக்கமுடியாத இப்படிப்பட்ட விடயங்களை தனியாக நாங்கள் அந்த அரசியல் அறிக்கையில் முன் வைத்திருக்கின்றோம்.


முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் இந்த வழிகாட்டல் குழுவின் அறிக்கை தயாரிப்புக்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளார். அவ்வாறு பங்களிப்புச் செய்தவர் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவரின் கட்சிக்காகவும் வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது, கல்முனை கரையோர மாவட்டம் பற்றி எல்லாம் வேகமாகப் பேசுகின்றார் அவ்வாறு பேசப்படுகின்ற அந்தக் கட்சியின் தலைமை இந்த விடயத்தை எந்த இடத்திலும் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதை இந்த இடத்தில் மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சகோதரர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விரும்பியிருந்தால் நாங்கள் தனியாக வடக்கு, கிழக்கு பிரிந்திருக்க வேண்டும், கல்முனை மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும் எனச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை மேலதிகமாச் சமர்த்திருப்பது போன்று அவராலும் கட்சியின் சார்பாக சம்ர்ப்பித்திருக்க முடியும். அவ்வாறு அவர் சமர்ப்பிக்கவில்லை.
அது மாத்திரமல்லாமல் கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கிறார் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் கண்டிருக்கின்றேன். ஆனால், இது விடயாக எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. 4 கட்சிகள் கொண்ட அறிக்கையில் கூட இந்த விடயம் வரவில்லை.
நாங்கள் மிகத் தெளிவாக இலங்கையில் 26 மாவட்டங்கள் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளோம். சகோதரர் ஹரீஸின் கட்சி சொல்ல வேண்டிய இடத்தில் முக்கியமான வடக்கு, கிழக்கு பிரிந்திருத்தல், கல்முனை மாவட்டம் தேவை என்பது குறித்து உத்தியோகபூர்வமாக தெளிவாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இவ்வாறு அமைச்சர் றிஷாட் விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
எது எவ்வாறாயினும், கரையோர மாவட்டம் பெற்றுத் தருவோம் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களிடம் தேர்தல் காலங்களில் கூறி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசியல் யாப்பில் அவ்வாறான முன்மொழிவுகள் எதனையும் வழங்கவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் கல்முனை மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் எதுவும் குறிப்பிடாமல்  கை கழுவியிருக்கும் நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அதற்காகக் குரல் கொடுத்து போராட்டம் செய்வதுடன் பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என்றும் சபதம் இட்டுள்ளார்.
இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் எந்தக் கருத்தையும் தெரிவிப்பதாக இல்லை.

  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top