வித்தியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி, பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி வித்தியா, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தப் படுகொலையின் விளைவாக, வடக்கில் பெரும் கொந்தளிப்பான நிலைமைகள் ஏற்பட்டன. வன்முறைகளும் இடம்பெற்றன.
இந்தநிலையில், வித்தியா கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் முடிவில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகம் இளஞ்செழியன் ஆகியோரைக் கொண்ட ட்ரயல் அட் பார் முறையிலான சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.
கடந்த ஜூன் 28ஆம் திகதி தொடங்கிய விசாரணைகள் அனைத்தும் செப்டெம்பர் 13ஆம்திகதி நிறைவடைந்தன.
இந்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்ட 9 பேருக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளில், இரண்டு பேரில் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்றும், ஏனைய ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, அரசதரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் தீர்ப்பாயத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று தீர்ப்புக்கு நாளிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் அமர்வு இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நடைபெறும்.
இதன்போது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு மூன்று நீதிபதிகளாலும் வழங்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment