வடக்கு, கிழக்கு இணைவு, கல்முனை மாவட்டம்

அதிர்வில் அமைச்சர் றிஷாட்பிதி அமைச்சர் ஹரீஸ்



நேற்று புதன் கிழமை இடம்பெற்ற அதிர்வு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதில் மிகக் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இதில் சில விடயங்களை சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என கருதலாம்.
அதிர்வில இடம்பெற்ற விவாதத்தை நோக்கும்போது கிழக்கு மாகாண மக்களின் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தோடு இணையக்கூடாது, இவைகள் பிரிந்தே இருக்க வேண்டும், கல்முனை மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும் என்ற விடயங்களில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கொண்டுள்ள அபரிமீதமான அக்கறையில் ஒரு துளி கூட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அக்கறை செலுத்தியிருக்கவில்லை என்பதை வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை விடயமாக விவாதிக்கும்போது அறிய முடிகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அம்மக்களின் நலன் கருதி வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ள விடயம் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் நான்கு கட்சிகளுடன் சேர்ந்து வெறுமனே நாட்டில் 9 மாகாணங்கள் இருக்க வேண்டும் என்று மாத்திரமே இதுவிடயத்தில் யோசனை தெரிவித்துள்ளது விவாதத்தின் போது தெரிய வந்தது.
மாறாக வடக்கும் கிழக்கும் இணைவதால் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?  40% ஆக் இருக்கும் முஸ்லிம்களின் விகிதாசாரம் எவ்வாறு மாற்றமடையும் என்ற விடயங்களை தெரிவித்து மாற்று யோசனைகள் எதனையும் தெரிவிக்காது வெறுமனே நாட்டில் 9 மாகாணங்கள் இருக்க வேண்டும் என்று மாத்திரமே வழிப்படுத்தல் குழுவில் அங்கத்தவராக இருந்த  முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் கூட்டு முன்மொழிவாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது கிழக்கு வாழ் முஸ்லிம்மக்கள் விடயத்தில் அவருக்கு அக்கறை இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. இதுகிழக்கில் வாழும் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாரிய துரோகமாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் நான்கு கட்சிகளுடன் சேர்ந்து வெறுமனே நாட்டில் 9 மாகாணங்கள் இருக்க வேண்டும் என்ற யோசனை குறித்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு அதற்குள் ஒரு அலகு வழங்கப்பட்டால் அப்போது கூட 9 மாகணங்கள்தானே  இருக்கப் போகின்றது என்ற ஊடவியலாளரின் குறுக்கு  கேள்வி ஒன்றுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் சரியான பதில் அளிக்க முடியாமல் இது விதண்டாவாதம் என்று கூறிவிட்டார்.
அதுமாத்திரமல்லாமல் எந்தக் கொம்பன் வந்தாலும் வடக்கும் கிழக்கும் இணையாது. அதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் போராட்டம் நடத்தியே தீர்வோம். இது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. இது கட்சியின் நிலைப்பாடு இல்லை இது அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு எனக் கூறிக்கொண்டு எவராவது வரட்டும் அதற்குப் பிறகு பார்ப்போம் என்று ஆவேசமாக தனது கருத்தை முன் வைத்தார்.
இது குறித்து அமைச்சர் றிஷாட் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசியல் அறிக்கை பிரதமர் தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சம்பந்தன் ஐயா, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா போன்றவர்கள் பலமுறை கூடி எடுக்கப்பட்ட இடைக்கால அறிக்கைதான் இந்த அரசியல் மாற்ற அறிக்கை.
இந்த அறிக்கை இறுதியாக வடிவமைக்கப்பட்ட பிறகு குழுவில் கலந்து கொண்ட எல்லோருக்கும் இந்த அறிக்கைக்கு நீங்கள் உடன்படுகின்றிர்களா? இல்லையென்றால் உங்களின் கருத்துக்களைத் தாருங்கள் என்றும் கேட்கப்பட்டது. அவ்வாறு கேட்கப்பட்டபோது அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவருடைய கட்சியின் நிலைப்பட்டையும் நிமால் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டையும் அதேபோன்று சுமந்திரனும் சம்பந்தன் ஐயா அவர்களும் அவர்களின் நிலைப்பாட்டையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எங்கள் கட்சியின் நிலைப்பட்டையும் கொடுத்திருக்கின்றோம்.
இதற்கு மேலதிகமாக நாங்கள் வடக்குடன் கிழக்கு இணையக்கூடாது, கல்முனை மாவட்டம் அது எங்களால் ஏற்கனவே ஒலுவில் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கரையோரம் என்பதை தவிர்த்து அதனையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டு கொடுத்திருக்கின்றோம். வடக்கு, கிழக்கு பிரிப்புக்கான நியாயங்களை நாங்கள் அதில் தெரிவித்துள்ளோம். காணி அதிகாரத்தை ஏன் வழங்க வேண்டும் வழங்கக்கூடாது என்பதை முல்லைதீவில் வடக்கு மாகாண சபை நடந்து கொள்ளும் முறையை நாம் உதாரணம் காட்டியுள்ளோம்.
இவ்வாறு அரச காணி, மாகாண ஆளுநரின் அதிகாரங்கள், இரண்டாவது சபை, தேர்தல் முறை ஜனாதிபதியின் அதிகாரங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் எங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல முன் மொழிவுகளை வழங்கியுள்ளது.
எங்களால் 4 கட்சிகளுடன் ஒன்றிணைந்து முன் வைக்கமுடியாத இப்படிப்பட்ட விடயங்களை தனியாக நாங்கள் அந்த அரசியல் அறிக்கையில் முன் வைத்திருக்கின்றோம்.
முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் இந்த வழிகாட்டல் குழுவின் அறிக்கை தயாரிப்புக்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளார். அவ்வாறு பங்களிப்புச் செய்தவர் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவரின் கட்சிக்காகவும் வடக்கும் கிழக்கும் இணையக் கூடாது, கல்முனை கரையோர மாவட்டம் பற்றி எல்லாம் வேகமாகப் பேசுகின்றார் அவ்வாறு பேசப்படுகின்ற அந்தக் கட்சியின் தலைமை இந்த விடயத்தை எந்த இடத்திலும் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதை இந்த இடத்தில் மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
சகோதரர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் விரும்பியிருந்தால் நாங்கள் தனியாக வடக்கு, கிழக்கு பிரிந்திருக்க வேண்டும், கல்முனை மாவட்டம் உருவாக்கப்படல் வேண்டும் எனச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை மேலதிகமாச் சமர்த்திருப்பது போன்று அவராலும் கட்சியின் சார்பாக சம்ர்ப்பித்திருக்க முடியும். அவ்வாறு அவர் சமர்ப்பிக்கவில்லை.
அது மாத்திரமல்லாமல் கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக பிரதி அமைச்சர் ஹரீஸ் எவ்வளவு தூரம் அக்கறையுடன் இருக்கிறார் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் கண்டிருக்கின்றேன். ஆனால், இது விடயாக எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை. 4 கட்சிகள் கொண்ட அறிக்கையில் கூட இந்த விடயம் வரவில்லை.
நாங்கள் மிகத் தெளிவாக இலங்கையில் 26 மாவட்டங்கள் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளோம். சகோதரர் ஹரீஸின் கட்சி சொல்ல வேண்டிய இடத்தில் முக்கியமான வடக்கு, கிழக்கு பிரிந்திருத்தல், கல்முனை மாவட்டம் தேவை என்பது குறித்து உத்தியோகபூர்வமாக தெளிவாக எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இவ்வாறு அமைச்சர் றிஷாட் விவாதத்தில் சுட்டிக்காட்டினார்.
இடைக்கால அறிக்கையின்  வழிப்படுத்தல் குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸ். உரிய நேரத்தில் தங்களது அறிக்கைகளை உரியவாறு சமர்ப்பிக்கவில்லை அல்லது சமர்பிக்கவே இல்லை என்பது இதன் மூலம் உறுதியானது.
கல்முனை மாவட்டம் என்ற விடயம் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் எண்ணமாக இருந்திருக்கும் என்ற எண்ணப்பாட்டில் எங்கள் கட்சி கல்முனை மாவட்டக் கோரிக்கையை தெளிவாக முன் வைத்தோம் என அமைச்சர் றிஷாட் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.  
அமைச்சர் றிஷாத் போன்றவர்களும் எங்கள் கொள்கைகளுடன் ஒத்த கொள்கையில் இருக்கும் போது  எங்களுக்கென்ன என கல்முனைக் கரையோர மாவட்ட விடயத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் றிஷாதின் உணர்வை அந்தக் கட்டத்தில் பிரதி அமச்சர் ஹரீஸ்  பாராட்டினார்
வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது, கல்முனை கரையோர மாவட்டம் விடயங்களில் பிரதி அமைச்சர் ஹரீஸ் வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளார். யாராவது எதிர்த்தால் பிறகு பார்ப்போம் என்று கடும் தொணியில் பேசும் வெறியில் உள்ளார்.  பிரதி அமைச்சர் ஹரீஸின் இச் சமூக உணர்வை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால், கட்சித் தலைமைத்துவம் இவரின் அபிலாஷைகளுக்கு இடம் வழங்கவில்லை என்பதை வழிகாட்டல் குழுவின் அறிக்கையை பார்க்கும்போது தெரிய வருகின்றது.
கட்சியின் தலைவர் அப்படியிருந்த போதும் அவர் மீது குற்றம் சுமத்தாமல் அவரைப் பாதுகாப்பதற்காக பிரதி அமைச்சர் ஹரீஸ் விவாதத்தின்போது பட்டபாடு மக்களுக்கு தெளிவாகப்புரிந்து கொள்ள முடிந்தது. இதற்காக "கேளுங்களேன்" என்ற சொல் பல தடவைகள் அவரால் பாவிக்கப்பட்டதும் மேசையில் கைகளால் அடிக்கப்பட்டதும் அறிக்கை அடங்கிய தாள்கள் அடிக்கடி புரட்டப்பட்டதும் அதிக தடவைகள் இடம்பெற்றன.
மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலம் முஸ்லிம்களுக்கு பாதிப்பானது என்பதை இருவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
எதிர்காலத்தில் இது தொடர்பான பாதகங்களை குறைக்க மாகாண ரீதியில் உலமாக்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட குறைந்தது 18 பேர் கொண்ட ஒரு நடுநிலை குழு அமைக்கப்படல் வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் றிஷாட் முன்வைத்தார். இந்த கருத்தை ஒத்ததாகவே பிரதி அமைச்சர் ஹரீஸும் கூறினார்.
வழக்கறிஞரான ஹரீஸ் கலப்பு தேர்தல் முறை என்பது, ஐம்பது வெல்லும் கட்சிக்கும் ஏனைய ஐம்பதும் தோற்கும் கட்சிக்கும் என கூறியிருந்தார் (ஐம்பதுக்கும் ஐம்பது விகிதத்தை அடிப்படையாக கொண்டு).
இறுதியில் அமைச்சர் ஹக்கீமை நோக்கி இரு விவாத அழைப்புக்கள்  விடுக்கப்பட்டன. அதில் ஒன்று அமைச்சர் றிஷாதினுடையது. மற்றையது குறித்த அதிர்வு நிகழ்வின் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்டது. பல அழைப்புக்கள் விடுத்தும் அவர் வருகிறாரில்லை என்ற குற்றச்சாட்டை ஊடகவியாளர் முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் அமைச்சர் றிஷாட், கடந்த ஆட்சியில் மஹிந்த அரசாங்கத்திலிருந்து நாங்கள் விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் கூட்டுச் சேரும் போது முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எந்த முஸ்லிம் கட்சிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்ற கோரிக்கையையே நாங்கள் முன் வைத்தோம் என்று தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர் ஹரீஸ் குறுக்கிட்டு ஏதோ சொல்ல வந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் றிஷாட் தொப்பி அளவானவர்கள் அணிந்து கொள்ளட்டும் என்றார்.
அத்தோடு பிரதி அமைச்சர் ஹரீசுக்கு தெரிய வாய்ப்பில்லாததும் அமைச்சர் ஹக்கீமுக்கும் அமைச்சர் றிஷாதுக்கும் மாத்திரம் தெரிந்த விடயங்கள் பற்றிய பல விடயங்களில், அமைச்சர் ஹக்கீம் மீது அமைச்சர் றிஷாத் குற்றச் சாட்டுக்களை அடுக்கினார். குற்றம் புரிந்தது யார்  என நிரூபிக்க அமைச்சர் ஹக்கீம் விவாத அழைப்பை ஏற்பாரா
மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top