காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்;

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்:

இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது

சுஐப் எம் காசிம்



மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை உறுதியாகவிருந்தார். எனினும் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதியளித்தோர் இறுதி நேரத்தில் தமது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இதனால் அந்தத் திருத்தத்தில் முஸ்லிம் மற்றும் மலையக மக்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்பையும் பிரதிநிதித்துவத்திற்கான உத்தரவாதத்தையும் பெற்றுக்கொண்டோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாங்கள் நேரடியாக கையளித்த திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதையடுத்தே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுஎன்று சிரேஷ்ட சட்டத்தரணியும் மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு, சட்ட விவகாரப் பணிப்பாளருமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது என்ற செய்தி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு கிடைத்ததிலிருந்து இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டுமென்பதில் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து போரடியவர்களில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் ஒருவராவார்.

இந்தத் திருத்தச்சட்டமூலத்தை சாதாரணப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமென்று அரசாங்கம் தீர்மானித்திருந்த வேளை, நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி காலை அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் சட்டமா அதிபருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய சந்திப்பின் போது, சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்ற வேண்டுமென்பதை சுட்டிக்காட்டி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவியையும் பெற்று சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மாற்றச் செய்தவர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆவார்.

முஸ்லிம் மற்றும் மலையகத்தவர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட்  பதியுதீன் வாக்களித்ததனால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் சமூக நலன் விரும்பிகள் மத்தியிலும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அமைச்சரின் ஊடகப்பிரிவுக்கு உள்ளது.

அந்த வகையில் நடந்த விடயங்களை மக்கள் மன்றில் தெரிவிப்பது பொருத்தமானதென்று கருதியே இந்த ஆக்கத்தை வெளிக்கொணர்கின்றோம்.

ஹக்கீமை தொடர்பு கொண்ட றிசாட்

வெளிநாட்டிலிருந்த அமைச்சர் ரிஷாட்டுக்குஇப்படியொரு சட்டமூலத்தை அவசர அவசரமாக அரசாங்கம் கொண்டுவர முயற்சிப்பதாக ஊடகப்பிரிவு அறிவித்தது. கடந்த 18 ஆம் திகதி மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அமைச்சர், இது தொடர்பிலான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றார். மறுதினம் காலை 19 ஆம் திகதி கட்சித்தலைவர் கூட்டத்துக்கு வருமாறு அமைச்சர் ரிஷாட்டுக்கு அழைப்பு வருகின்றது. கட்சித்தலைவர் கூட்டத்துக்குச் செல்லும் முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் பேசிக்கொள்கின்றனர்.

இதன் பின்னர் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தியுடன் தொடர்பை ஏற்படுத்திய அமைச்சர் ரிஷாட், இந்தத் திருட்டுத்தனமான சட்டமூலத்தினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கப்போகும் ஆபத்துக்களை விளக்கியதுடன், முஸ்லிம் எம்.பி.களை உடன் அழைத்து, இது தொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வருமாறு ஜம்இய்யாவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அரசாங்கத்துடன் முரண்பாடு

அதன் பின்னர் கட்சித்தலைவர் கூட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட்  சென்றார். அங்கு மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் மிகவும் தீவிரமான பேச்சுக்களில் ஈடுபட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் அரசாங்கம் கொண்டுவர தீர்மானித்துள்ள மாகாணபை தேர்தல் திருத்தத்தில், குழு நிலையில் மேலும் சில திருத்தத்தை செய்து சட்டத்தை நிறைவேற்றப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அங்கு அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட் ஆகியோர் அவ்வாறு மேற்கொள்ள வேண்டாமெனக் கூறி அரசாங்கத்துடன் முரண்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் அமைச்சர்களான ஹக்கீம், ரிஷாட்டுக்குமிடையே பாரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டன. எனினும் அரசாங்கமோ பிரதமரோ இந்த முயற்சியில் பின்வாங்கியதாகத் தெரியவில்லை.

ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் சந்திப்பு

அதே நாள் 19 ஆம் திகதி இரவுமாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையகத்தில் அதன் தலைவர் ரிஸ்வி முப்தியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, முஜீபுர்ரஹ்மான், மன்சூர் ஆகியோர் உட்பட புத்திஜீவிகள் பலர் பங்கேற்றனர்.

முஜிபுர் ரஹ்மான் கழுத்தறுப்பு

அங்கு பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயங்களை அந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார். இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பங்கேற்றவர்களும் கருத்துத் தெரிவித்தனர். எனினும் முஜீபுர்ரஹ்மான் எம்.பி. இந்தத் தேர்தல் முறையை ஆதரிக்கப்போவதாகக் கூறி இடை நடுவில் வெளியேறிவிட்டார். அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமூலத்தை எதிர்ப்பதென்ற கருத்தொருமைப்பாட்டுக்கு வந்திருந்தனர்.

அசையாத ரணில்

அடுத்த நாள் 20 ஆம் திகதி காலை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மனோகணேசன் மற்றும் ராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரை மாறி மாறி சந்தித்து இந்த சட்ட மூலத்தை கொண்டுவருவதால் முஸ்லிம், மலையக சமூகம் எதிர்நோக்கப் போகும் ஆபத்துக்களை எடுத்துரைத்தனர்.

எவ்வளவுதான் கெஞ்சினாலும் பிரதமரோ, பைஸர் முஸ்தபாவோ தமது நிலைப்பாட்டிலிருந்து இம்மியளவும் பின் வாங்காத நிலையில், பிரதமரின் அறைக்கு வெளியே இருந்த லொபியில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட், ஹிஸ்புல்லாஹ் உட்பட முஸ்லிம் எம்.பி.மார் மீண்டும் கூடி எதிர்ப்பதென்ற முடிவுக்கு வந்தனர்.

அந்த வேளை அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ஹலீம், முஜீபுர்ரஹ்மான் ஆகியோர், சட்டமூலத்தை ஆதரவளிக்க வேண்டுமென அங்கு வந்து வலியுறுத்தியதோடு சில அழுத்தங்களையும் கொடுத்தனர்.

பல்டியடித்தார் ஹக்கீம்

எனினும் எதிர்ப்பதென்ற முடிவிலேயே இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இருந்த போதும், நண்பகல் 12 மணிக்கிடையில் அமைச்சர் ஹக்கீமும், மனோ கணேசனும் சட்ட மூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, எழுத்து மூலமான கடிதமொன்றை வழங்கியிருப்பதாக செய்திகள் கசியத்தொடங்கின. எனினும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வரவில்லை. ஹிஸ்புல்லாஹ்வும் இதே நிலைப்பாட்டிலேயே இறுதிவரை நின்றார்.

பிரதமர் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் ஒரு வேண்டாதவராகவும், வேப்பங்காயாகவும் அன்று மாறியிருந்தார். அமைச்சர் ரிஷாட்தான் விடாப்பிடியாக இருப்பதாகவும் சட்ட மூலத்தைத் தோற்கடிப்பதில் பல முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அரசாங்க அமைச்சர்களுக்கு தகவல் போய்ச்சேருகின்றது. கடந்த அரசாங்கத்தின் பலமான அமைச்சர் ஒருவருடன் அமைச்சர் ரிஷாட் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாக, ரிஷாட்டுக்கு வேண்டாதவர்கள் சிலர் புரளியைக் கிளப்பி விட்டிருந்தனர். அமைச்சர் ரிஷாட்டை எப்படியாவது மசிய வைக்க வேண்டுமென பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சமூகத்திற்கான இந்தப் போராட்டத்தில் ரிஷாட் சளைக்கவில்லை.

அமெரிக்காவிலிருந்து அழைத்த மைத்திரி

முன்னதாக அமெரிக்காவிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, அமைச்சர்களான ஹக்கீம், மனோ, ரிஷாட் ஆகியோருடன் சட்ட மூலத்தை ஆதரிக்குமாறு தொலைபேசியில் வேண்டிக்கொண்டதை இந்தப்பத்தியில் சுட்டிக்காட்டியேயாக வேண்டும்.

எத்தனையோ பிரயத்தனங்கள் நடந்தும் அமைச்சர் ரிஷாட்சமூகத்துக்கான தனது போராட்டத்தில் உறுதியாக நின்ற போதும், அவருடன் கைகோர்த்து நின்றவர்கள் தங்களது உறுதிப்பாட்டை தளர்த்தியவர்களாக கைவிரித்துக் கொண்டனர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

முஸ்லிம் சமூகம் ஓர் ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்பட்டு வருவதை அமைச்சர் ரிஷாட் உணர்ந்த பின்னர்தான் தனது இறுதிக்கட்ட முயற்சியாக, பிரதமர் ரணிலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில திருத்தங்களை முன்வைத்ததுஎன விவரிக்கும் ருஷ்தி ஹபீப், அதன் பின்னர் நடந்த சம்பவங்களை விலாவாரியாகக் கூறுகிறார்.

மக்கள் காங்கிரசின் திருத்தங்கள்

பிரதமரின் அறைக்குள் அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி மற்றும் சில எம்.பி.கள் இறுதிக்கட்ட பேச்சில் ஈடுபட்டிருந்த போது, பிரதமரின் அலுவலக உதவியாளர் ஒருவர் வந்து அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த என்னை அழைத்தார். நான் அங்கு சென்றபோது, பிரதமர் ரணில், அமைச்சர் ரிசாட்டை எப்படியாவது மசியவைக்க  வேண்டுமென்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்த வேளையில் நாங்கள் சில திருத்தங்களை எழுத்து மூலம் முன் வைத்தோம். அந்தத்திருத்தங்கள் ஏற்கனவே எம்மால் தயாரிக்கப்பட்ட ஒன்றல்ல. அந்த இடத்திலேயே என்னால் மேற்கொள்ளப்பட்டவை.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், அது மட்டுமன்றி பிரதமர் ரணில் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட மீளாய்வுக்குழு இதன் சாதக பாதகத் தன்மையை பரிசீலித்து இறுதி முடிவை மேற்கொள்ள வேண்டும்என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, எனது கையெழுத்தில் திருத்தத்தை வழங்கினோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது கைப்பட இதில் சில திருத்தங்களை செய்தமையை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். நாங்கள் கையளித்தத் திருத்தம் இறுதி வரைவில் உள்வாங்கப்பட்டதை நான் மிகவும் சந்தோஷத்துடன் கூற விரும்புகின்றேன்.

கூரிய கத்தி கழுத்திலே வைக்கப்பட்ட பின்னர், அந்த பேராபத்திலிருந்த சமூகத்தை மீட்டெடுக்க நாம் மேற்கொண்ட இறுதிக்கட்ட முயற்சியே அதுவாகும்என்று ருஷ்தி ஹபீப் விபரித்தார்.

இதேவேளை மலையக முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 40 இற்கு 60 ஆக இருந்த பிரதிநிதித்துவத்தை 50 இற்கு 50 ஆக மாற்ற வேண்டுமென அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமும் பிரதமரிடமும் முன்வைத்த கோரிக்கை ஏற்கனவே பிரதமரினால் இணக்கம் காணப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டமையையும் நாம் இங்கு  குறிப்பிட்டாக வேண்டும்.

வேறு வழியற்ற முடிவு

சமூகத்தின் மீது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொண்ட அன்பினாலும் பற்றினாலும் நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ட கஷ்டங்களையும் அவஸ்தைகளையும் நான் நன்கு அறிவேன். நாடாளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட ஒவ்வொரு நகர்வுகளையும் அருகிலிருந்து உணர்ந்தவன் என்ற வகையில், இறைவன் சாட்சியாக, அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே வேறு மாற்று வழியின்றி இவ்வாறான முடிவொன்றை மேற்கொண்டார்என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.

நாங்கள் இறுதி நேரத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதியிலிருந்து ஓரளவு காப்பாற்றுமெனவும், இந்தத் திருத்தங்களின் பின்னரும் எமக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடக்கூடியஒரு வழிவகையை ஏற்படுத்தியுள்ளோம் என்ற மன நிறைவும் எமக்கு இருக்கின்றது. என்றும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top