வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மூலம்

வடக்கு,கிழக்கு இணைப்பின் சாத்தியத்தன்மை...!



இலங்கை நாடானது அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தின் பின்னணியில்  சர்வதேச சக்திகளின் அழுத்தம் இருக்கின்றதென பலராலும் நம்பப்படுகிறது. இதில் சில விடயங்கள் மிகவும் நுட்பமான முறையில் கையாளப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. எனவே, இது விடயத்தில் எமது பார்வைகளை மிகவும் அவதானமாக நுழைக்க கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது வெளியாகியுள்ள வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை புதிய அரசியலமைப்பு வரைபுக்கான வெள்ளோட்டமாக பார்க்கலாம். இவ்வரசானது சில விடயங்களை உள் நுழைத்து மக்கள் இதில் தங்களை சுதாகரித்துக் கொள்கின்றார்கள என நோட்டமிடலாம்அவ்வாறான விடயங்களில் ஒன்றாக வடக்கு,கிழக்கு இணைப்பை கருதுகிறேன்.

இவ் அறிக்கையில் மாகாணங்களை இணைத்தல் தொடர்பாக மூன்று யோசனைகளை முன் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது யோசனையே சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாக கருதப்படுகிறது. தற்போதைய அரசியலமைப்பின் படி மாகாணங்கள் இணைந்து செயற்பட 154..(03)ம் பிரிவு ஏற்பாடு செய்கிறது. இப் பிரிவுடன் உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பு வேண்டும் என மேலதிக தேவையாக யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தீர்ப்பு வைக்கப்படுதல் எனும் கூற்றை வெளிப்படையில் பார்க்கும் போது ஒரு அழகிய ஜனநாயக முறை போன்று தோன்றுகிறது. எங்கு மக்கள் தீர்ப்பை எடுப்பது என்ற வினாவை எழுப்புகின்ற போது இதன் பாரதூரத்தை அறிந்து கொள்ளலாம். 1987ம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் போது இவ்விணைப்பின் தொடர்ச்சிக்கு கிழக்கு மாகாணத்தில் மக்கள் தீர்ப்பு பெறப்படல் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கிழக்கில் தமிழ் மக்களை விட ஏனைய இன மக்கள் அதிகமாக உள்ளதால் நிச்சயம் அம் மக்கள் தீர்ப்பானது தோல்வியை தழுவும் என்பது யாவருக்கும் தெரியும். இதனால் தான் இதனை விடுதலைப் புலிகள் எதிர்த்தனர். இதனை அறிந்து தான் அரசியல் நரியான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் செய்தார். அதே நேரம் வடக்கையும் கிழக்கையும் சேர்த்து மக்கள் தீர்ப்பை நடத்தினால் அம் மக்கள் தீர்ப்பானது வெற்றிபெறும்.

தற்போதைய இடைக்கால அறிக்கையில் உரிய மாகாணங்களின் மக்கள் தீர்ப்பு பெறப்படல் வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இங்கு மாகாணங்களின் எனும் பன்மை வார்த்தையானது இரு மாகாணங்களிலும் மக்கள் தீர்ப்பு வைத்தல் வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இதனை இரு வகையில் மேற்கொள்ளலாம். இரு மாகாணங்களிலும் பொதுவாக மக்கள் வாக்கை பெற்று ஒரு முடிவுக்கு வர முடியும். இரண்டாவது இரு மாகாணங்களிலும் தனித்தனியே மக்கள் தீர்ப்பை பெற்று இரு மாகானங்களும் விரும்புகின்றதா என்பதை பார்க்க முடியும். இதில் முதலாவது முறையில் வடிவமைக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கை மிக இலகுவாக தமிழ் தரப்பால் இணைத்து கொள்ள முடியும். இரண்டாவது முறையில் வடிவமைக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தல் அவ்வளவு இலகுவில் சாத்தியப்பட்டு விடாது. இங்குள்ள வார்த்தை மயக்கம் தெளிவுபடுத்தப்பாடல் வேண்டும்.

தற்போதைய அரசியலமைப்பில் மாகாணங்கள் இணைந்து செயற்பட 154..(03)ம் பிரிவு வழி வகுக்கிறது. இப் பிரிவானது மாகாணங்களின் இணைப்புக்கு பாராளுமன்றம் ஏதேனும் சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யலாம் என கூறுகிறது. இங்கு மாகாணங்களின் இணைப்பின் சாத்திய தன்மைக்கு  எந்த வகையான சட்டத்தின் மூலம் என வரையறுக்கப்படவில்லை. அதாவது மாகாணங்கள் இணைவதாக இருந்தால்  பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதன் மூலமே நிறைவேற்ற முடியும். பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்து அது இலகுவான சட்டத்தின் கீழ் இவ்விடயம் நிறைவேறாது.

அதே நேரம் தற்போது இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் மக்கள் தீர்ப்பு என மாகாணங்களின் இணைப்புக்கான நிபந்தனை வரையறை செய்யப்பட்டு, தற்போதுள்ள அரசியலமைப்பில் கூறப்பட்ட்டுள்ளதன் பிரகாரமான நான் மேலே குறிப்பிட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புக்கு வரையறை செய்யப்படாத நிபந்தனை விதிக்கும் அச் சிறுபாகம் நீக்கப்ப்படுமாக இருந்தால் வடக்கு மற்றும் கிழக்கின் சாத்தியத் தன்மை முன்னரை விட ஒரு படி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. நான் மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தை மயக்கம் தெளிவுபடுத்தப்படல் வேண்டும் எனும் விடயத்தையும் இதனையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தால்வடக்கு மற்றும் கிழக்கை இணைத்தலுக்கான மிக நுட்பமான முயற்சி நடைபெறுகிறதா என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.
துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top