ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசி

அரசாங்கத்தினால் இறக்குமதி


அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டு இன்று தொடக்கம்  சதோச ஊடாக விற்பனை செய்யப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில்  ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
 அரிசி இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்துடன் விலையை நிர்ணயிப்பதாக தெரியவந்தமையால் குறித்த வர்த்தகர்களுடன் கலந்துரையாடி விலைகுறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
டுத்துவரும் மாதங்களில் சர்வதேச சந்தை விலைகளை கருத்திலெடுக்காமல் ஐந்து இலட்சம் மெற்ரிக் தொன் அரிசியை அரசாங்கத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சதோசவினால் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான அரிசிகளினதும் விலைகளை குறைத்து அந்த விலைகளை இன்றை தினம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார்.

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை கிலோவொன்று 65 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் கூடுதல் இலாபத்துடன் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் சேவை அதிகார சபைக்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் சதோசவினால் விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலைகளை நேற்று முதல் குறைக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வாகனங்கள் மூலம் தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறும் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
 அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதிக்கு உரிய விலைமனு கோரல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்ற போதிலும் தேவையற்ற நிர்வாக மற்றும் சட்ட செயற்பாடுகளால் அலுவலர்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், உரிய செயற்பாடுகளை பின்பற்றி வினைத்திறனாக செயற்படுமாறும் ஜனாதிபதி ஆலோசனை கூறினார்.
 வர்த்தக மற்றும் விவசாய அமைச்சு அலுவலர்கள் அடங்கிய குழு வாராந்தம் கூடி அத்தியாவசிய உணவு பொருட்களின் அளவு மற்றும் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.
 அத்தியாவசிய விலை அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதெனவும், இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை செயற்திறனாக, நேரடியாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 இந்த நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரிஷாத் பதியுதீன், மகிந்த அமரவீர, சுஜீவ சேனசிங்க, எரான் விக்ரமரத்ன மற்றும் தொடர்புடைய அமைச்சுக்களின் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top