மாலைதீவில் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம்
இந்தியப் பிரதமருடன் இலங்கை நிலவரம் குறித்து பேச்சு

மாலைதீவில் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நேற்று நடந்த மாலைதீவின் புதிய அரசாங்கம் பதவியேற்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இந்த நிகழ்வில் பங்கேற்பார் என்று அவரது தனிப்பட்ட செயலாளர் கூறியிருந்தார். எனினும் மஹிந்த ராஜபக்ஸ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மாத்திரம் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களுக்காக போடப்பட்ட ஆசனங்களில் முன்வரிசையில் இந்தியப் பிரதமர் மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிகள் கயூம், நசீட் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்வில் சந்திரிகாவுடன் இந்தியப் பிரதமர் கலந்துரையாடினார்.

தற்போது இலங்கையில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க அண்மையில், காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கடந்த மாதம் 26ஆம் திகதிக்குப் பின்னர், இந்தியத் தலைவர்களுடன் இலங்கையின் அரச முக்கியஸ்த்தர்கள் எவரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வரும் சூழலில், இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க இந்தியப் பிரதமருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top