52 நாள் ஆட்சிக்கு அழைத்தவர்களே என்மீது
பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்
குண்டுத் தாக்குதல் செய்தியின் பின்னரே
சஹ்ரானை எனக்கு தெரியும்

தெரிவுக்குழு முன் முன்னாள் அமைச்சர் ரிஷாட் சாட்சியம்






பிரதி சபாநாயகர் கேள்வி :

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் உங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு இடமளிக்குமாறு கோரியிருந்தீர்கள். இதுபற்றிய விளக்கத்தை கூறவும்.

பதில் :

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென நானே சபாநாயகரிடம் முதன் முதலில் கோரிக்கை விடுத்திருந்தேன். பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் விபரங்கள் இருந்தால் தெரியப்படுத்துமாறு பத்திரிகை அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. எனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததுடன், 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்றையும் சமர்ப்பித்திருந்தனர். பயங்கரவாதத்துடன் நான் தொடர்புபட்டிருப்பதாக மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இதன் பின்னரே என்னையும் தெரிவுக்குழுவில் அழைத்து விசாரிக்குமாறு நான் கோரியிருந்தேன்.

அது மாத்திரமன்றி எனக்கு எதிராக முறைப்பாடுகள் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் மாஅதிபர் கோரியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானை எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கவுமில்லை, எந்தவொரு பயங்கரவாத சம்பவத்துடனும் தொடர்புபடவில்லை.

சம்பவம் நடைபெற்ற பின்னர் நானும் ஏனைய முஸ்லிம் தலைவர்களும் கர்தினாலைச் சந்தித்து எமது கவலையைத் தெரிவித்திருந்தோம். இந்தப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை கைதுசெய்து உச்ச தண்டனையை வழங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததுடன் அன்றிலிருந்து நான் உள்ளிட்ட எமது சமூகத்தினர் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வழங்கத் தொடங்கினோம்.

அது மாத்திரமன்றி பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்களின் உடல்களை எமது மையாவடிகளில் புதைப்பதற்கும் இடமளிக்கவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்படும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகும். பிற மதத்தவர்களைக் கொல்ல வேண்டும் என இஸ்லாம் மதத்தில் எந்த விடத்திலும் கூறப்படவில்லை.

அமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி : .எஸ்..எஸ் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்;

குர்ஆனில் ஒரு உயிரை கொல்வது முழு சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. ஒரு உயிரை பாதுகாப்பது சமூகத்தை பாதுகாப்பதற்கு சமமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற மதத்தவர்களை கொல்லுமாறு குர்ஆனில் எவ்விடத்திலும் கூறப்படவில்லை. பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

அமைச்சர் ரவி கருணாநாணக்க கேள்வி : பயங்கரவாத செயற்பாடுகளுக்கு சதோச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : சதோச நிறுவனம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர் நாடு முழுவதிலுள்ள சதோச கிளைகளின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிக்கப்பட்டதுடன், ஏனைய சுப்பர் மார்க்கட்டுக்களுடன் போட்டியிட்டு சிறந்த இடத்துக்கும் வரமுடிந்தது. சதோச மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. என்னுடன் உள்ள வைராக்கியம் காரணமாக எதிர்க்கட்சியில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களைக் கூறித்திரிகின்றனர். 52 நாட்கள் ஆட்சி மாற்றத்தில் என்னை தமது பக்கத்துக்கு வருமாறு அழைத்த உறுப்பினர்களே இப்போது இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஊடகங்களில் என்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்கள் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்வார்கள் என எதிர்பார்த்திருந்தேன். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாக இருந்தால் என்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று முறைப்பாடுகளைச் செய்திருக்கலாம். என்மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக நான் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி .திஸ்ஸாநாயக்க, விமல வீரவன்ச ஆகியோருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளேன். என்னைப் பற்றி அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வீடியோ சீடிக்களையும் வழங்கியுள்ளேன். சதோச வாகனங்களுக்கு ஜீ.பி.எஸ் பொருத்த நானே நடவடிக்கை எடுத்திருந்தேன். நாடு முழுவதிலும் 410 கிளைகள் இருப்பதால் 100ற்கும் அதிகமான வாகனங்கள் இருக்கின்றன. இவற்றை வினைத்திறனாக செயற்படுத்தும் நோக்கில் வாகனங்களுக்கு ஜீ.பி.எஸ் பொருத்த 2017ல் நடவடிக்கை எடுத்திருந்தேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கவில்லை.

அமைச்சர் ரவி கருணாநாயக்க கேள்வி : அலாவுதீன் என்பவர் உங்கள் கட்சியின் பொருளாளராக இருந்தாரா?

பதில் : அலாவுதீன் என்பவர் ஒரு வியாபரரி. 2010ஆம் ஆண்டு நாம் கட்சியை ஆரம்பித்தபோது அவர் எமது கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் வேலைப்பளு காரணமாக அவரை உபபொருளாளராக நியமித்தோம். சம்பவம் நடைபெற்ற பின்னர் அலாவுதீன் என்னைச் சந்தித்திருந்தார். அவர் கூறியது என்னவெனில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தானும் தனது மகளும் மன்னாருக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். குண்டுத் தாக்குதல் நடத்திய ஒருவரையே அவருடைய மகள் திருமணம் முடித்திருந்தார்.

தனது கணவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது மனைவிக்கு முன்னரே தெரிந்திருக்கவில்லை. தான் சம்பியாவுக்குச் செல்வதாகக் கூறியிருப்பதுடன், மனைவியே அவரை விமான நிலையத்தில் விட்டுள்ளார். அதன் பின்னர் தகப்பனுடன் மன்னார் சென்றுவிட்டார். அன்று இரவு டுபாயில் இருப்பதாக எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் கென்னியாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

பின்னர் சம்பியாவில் நிற்பதாகவும் கூறியுள்ளார். எனினும் குண்டுத் தாக்குதல் செய்தியின் பின்னரே அவர் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தமை குறித்து மனைவிக்கும், மாமனாரான அலாவுதீனுக்கும் தெரிந்துள்ளது. அவருக்கு நான்கு சிறு பிள்ளைகள் இருக்கின்றனர். குண்டுத் தாக்குதலின் பின்னர் அவர்கள் பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே?

பதில் : மொகைடீன் என்பவர் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்று அதிகாரியாகவிருந்தவர். இவருடைய மகனை அடையாளம் தெரியாதவர்கள் அழைத்துச் சென்றுவிட்டதாக 26ஆம் திகதி எனக்கு அழைப்பை ஏற்படுத்திக் கூறியிருந்தார். பொலிஸில் சென்று பார்க்கவில்லையா கேட்டபோது.

சென்று பார்த்ததாகவும் எனினும் அங்கு அவரில்லையென்றும் கூறினார். எனவே தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு முறைப்பாட்டையும் பதிவுசெய்திருந்தார். எனது வீட்டுக்கு வந்திருந்த அவர் தனது மகன் பிழை செய்திருந்தால் உச்ச தண்டனை வழங்கட்டும், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிந்து சொல்லுங்கள் எனக் கேட்டார். 27ஆம் திகதி வீட்டுக்கு வந்த அவர் அழுதுகொண்டேயிருந்தார்.

 நானும் தெஹிவளை ..சிக்கு அழைப்பை ஏற்படுத்தி விசாரித்தேன். அதன் பின்னர் டீ..ஜி.விக்ரமசிங்கவுக்கு அழைப்பை ஏற்படுத்திக் கேட்டேன். பொலிஸார் கைதுசெய்யவில்லையென பதில் கிடைத்தது. அதன் பின்னரே இராணுவத் தளபதியிடம் அழைப்பை ஏற்படுத்தி குறிப்பிட்ட நபரை கைது செய்தீர்களா இல்லையா எனக் கேட்டிருந்தேன். மூன்றாவது தடவை அழைப்பை ஏற்படுத்தும் போது விபரங்களை அனுப்பிவைக்குமாறு இராணுவத்தளபதி கேட்டுக்கொண்டார்.

விபரங்களையும் அனுப்பிவைத்தோம். தனது பிள்ளை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறியவே அவர் விரும்பினார். மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி இராணுவத்தளபதியிடம் கேட்குமாறு கோரவே மீண்டும் அழைப்பை ஏற்படுத்தியிருந்தேன்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பை ஏற்படுத்தவில்லையா?

பதில் : பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி என்பதால் அவருக்கு அழைக்கவில்லை. இராஜாங்க அமைச்சருடன் கதைத்திருந்தேன். அவரும் இராணுவத் தளபதியுடன் கதைத்துப் பார்க்குமாறு கூறியிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : இராணுவத் தளபதியின் சாட்சியத்தில் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் கதைக்கச் சொன்னதாகக் கூறினார். நீங்கள் என்ன கேட்டமைக்காக அந்தப் பதில் வழங்கப்பட்டது.

பதில் : நான் எதையும் கேட்கவில்லை. கைதுசெய்யப்பட்டவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவதே தேவையாக இருந்தது. அவர் கூறிய பதில் எனக்குத் தொடர்புபட்டதல்ல. ஏன் அவ்வாறு கூறினார் என்பதை அவரிடமே கேட்க வேண்டும்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : நீங்கள் குறிப்பிட்ட ஏதாவது கேள்வியைக் கேட்டீர்களா?

பதில் : பாரிய அனர்த்தமொன்றின் பின்னர் இராணுவம் பொலிஸார் பாரிய சேவை செய்துவந்தனர். அவர்களின் செயற்பாட்டை குறைத்து மதிப்பிட முடியாது. சந்தேகத்தின் பேரில் 2500ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்திருந்த சூழலில் நான் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றியே விசாரித்திருந்தேன்.

ஆஷூ மாரசிங்க கேள்வி : இதற்கு முன்னர் இராணுவத் தளபதியைத் தெரியுமா? அதன் பின்னர் அவரை தொடர்பு கொண்டீர்களா?

பதில் : நீர்கொழும்பில் முஸ்லிம் பள்ளிவாசலொன்றில் மையமொன்றை அடக்குவதற்காக கிராமத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இதற்கமைய மேலதிக இராணுவத்தினரை அனுப்பி பாதுகாப்பை பலப்படுத்தித் தருமாறு கோர இராணுவத் தளபதியுடன் கதைத்திருந்தேன். இதுபற்றி ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தேன். இதுதவிர வேறெந்த சந்தர்ப்பத்திலும் அவரை தொடர்புகொள்ளவில்லை.

ஆஷு மாரசிங்க கேள்வி : இப்ராஹிம்மை உங்களுக்குத் தெரியுமா?

பதில் : இப்ராஹிம் கொழும்பு வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர். நான் வர்த்தக அமைச்சராக இருந்த காரணத்தால் என்னை உத்தியோகபூர்வமாக சந்திக்க வந்திருந்தார். அப்படியொரு சந்திப்புக்கு வந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டே பொய் பிரசாரம் செய்கின்றனர். வர்த்தக சம்மேளனத்தின் விவகாரங்கள் பற்றிக் கதைப்பதற்கே அவர் வருவார். அவ்வாறு வரும்போது தனியாக வருவதில்லை. சம்மேளனத்தின் உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டே வருவார்.

ஆஷூ மாரசிங்க கேள்வி : இப்ராஹிம்மின் குடும்பத்தில் யாராவது உங்களிடம் சம்பளம் வாங்குபவராக இருந்தனரா?

பதில் : இப்ராஹிமுக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எனது அமைச்சில் எந்தப் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை. வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திக்க வருவார்.

ஆஷூ மாரசிங்க கேள்வி : இப்ராஹிமின் மகனை சந்தித்ததுண்டா?

பதில் : அலாவுதீனின் மகளை திருமணம் செய்திருந்தவரை மாத்திரம் ஏதாவது நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன்.

ஆஷூ மாரசிங்க கேள்வி : அவர்கள் யாராவது உங்கள் அமைச்சில் ஆலோசகர்களாக அல்லது உங்களின் இணைப்புச் செயலாளர்களாக இருந்துள்ளார்களா?

பதில் : எனது அமைச்சின் செயலாளர் எனது ஆலோசகர்கள் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய கடிதத்தை இங்கு சமர்ப்பித்திருந்தார். அவர்களைவிட வேறு யாரும் எனக்கு ஆலோசகர்களாகவோ அல்லது இணைப்புச் செயலாளர்களாகவோ இல்லை.

ஆஷூ மாரசிங்க கேள்வி : இப்ராஹிமின் மகனுடைய தொழிற்சாலைக்கு அமைச்சினால் வெற்றுத் தோட்டாக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆலோசனை வழங்கியிருந்தீர்களா?

பதில் : அமைச்சு பின்பற்றவேண்டிய வழிகாட்டல்கள் உள்ளன. இதற்கு மேலதிகமாக நாம் எதனையும் செய்யவில்லை. சம்பவம் இடம்பெற்ற தினம் மாலை இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. உடனடியாக அமைச்சின் செயலாளருக்கு விசாரணை நடத்துமாறு பணித்தேன். அவர் மூவரடங்கிய குழுவொன்றை அமைத்து அறிக்கையைப் பெற்றிருந்தார். அமைச்சு முன்னெடுக்க வேண்டிய நடைமுறைக்கு எதிராக எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆஷூ மாரசிங்க கேள்வி : இப்ராஹிமின் மிளகு மற்றும் பலசரக்குப் பொருட்களின் இறக்குமதிகளுக்கு உதவியிருக்கின்றீர்களா?

பதில் : பலசரக்குப் பொருட்கள் குறித்த விடயத்தில் நானும், அமைச்சர் தயா கமகேவும் தமக்கு ஒத்துழைப்பாக இல்லையென இப்ராஹிம் கூறியிருந்ததாக அநுரகுமார திஸ்ஸாநாயக்க கூறியிருந்தார். அப்படியான நிலையில் எப்படி நான் அவருக்கு உதவியிருக்க முடியும்.

எந்தவிதத்திலும் நான் தனிப்பட்ட ரீதியாக உதவவில்லை. அவருக்கும் எனக்கும் இடையில் உத்தியோகபூர்வமான சந்திப்புக்களே இடம்பெற்றுள்ளன.

ஆஷூ மாரசிங்க கேள்வி : சதோசவுக்கு பலசரக்குப் பொருட்களை அவர் வழங்கியுள்ளாரா?

பதில் : அவர் வழங்கினாரா இல்லையா என்று தெரியாது. டென்டர் மூலமே விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். இதற்கான செயற்பாடுகள் யாவும் செயலாளரின் கீழேயே முன்னெடுக்கப்படும்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : அடிப்படைவாதிகள் தொடர்பில் மௌலவிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். துருக்கியில் பயிற்சிபெற்ற 52 இலங்கையர்கள் பற்றி தகவல்கள் வெளியாகின. இதுபற்றித் தெரியுமா?

பதில் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எனக்கு எதிராக எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதுபற்றி எனக்குத் தெரியாது.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : சஹ்ரானைப்பற்றி எப்போது நீங்கள் கேள்விப்பட்டீர்கள்?

பதில் : குண்டுத் தாக்குதல்களின் பின்னரே சஹ்ரான் என்ற நபர் பற்றியும், இந்தளவு பிழையான விடயங்களை மேற்கொண்டுள்ளார் என்பதையும் அறிந்துகொண்டோன்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : சில அமைப்புக்கள் 2013, 2014 பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். நீங்கள் பாதுகாப்புச் செயலாளருக்கு இதுபற்றி தெரிவித்தீர்களா?

பதில் : இஸ்லாம் பிழையான செயற்பாடு செய்யுமாறு எங்கும் கூறவில்லை. வேறு ஒருவருக்கு பலவந்தப்படுத்த முடியாது. மதத் தலைவர்கள் பார்க்க வேண்டும் என்பதால் இப்பிரச்சினைகளில் நான் தொடர்புபடவில்லை. சஹ்ரான் மௌலவியும் இல்லை. குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் படித்த பணக்காரர்கள்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : ஹிஸ்புல்லா பிரதியமைச்சராக இருந்தபோது உங்கள் கட்சியில் இருந்தாரா,

பதில் : 2015 தேர்தலில் நாம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்கத் தீர்மானித்ததும் ஹிஸ்புல்லா எமது கட்சியிலிருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினார். அதற்கு முன்னர் ஐந்து வருடங்கள் என்ற குறுகிய காலமே எமது கட்சியிலிருந்தார்.

நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி : காத்தான்குடியிலேயே இக்குழு உருவாகிறது. காத்தான்குடியில் அரசியல் செய்யும் உங்களுக்கு இதுபற்றி ஏதுவும் தெரியப்படுத்தப்படவில்லையா?

பதில் : காத்தான்டியில் நாம் பலமான அரசியல் சூழலைக் கொண்டிருக்கவில்லை. 2018 பெப்ரவரி தேர்தலில் போட்டியிட்டே காத்தான்குடியில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைப் பெற்றோம். 2010ஆம் ஆண்டே கட்சியை ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்பொழுது 5 பேர் உள்ளோம். 160 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஹிஸ்புல்லா இருக்கும்போது காத்தான்குடியில் சஹ்ரான் பற்றி எதுவும் தெரிவித்திருக்கவில்லை. 2015ஆம் ஆண்டின் பின்னரே அவருடைய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top