தங்கொட்டுவையில் முஸ்லிம் வர்த்தகர்கள்
வியாபாரம் செய்யத் தடை !

இலங்கை நாடு எந்த திசையை நோக்கிச் செல்கின்றது?




வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொது சந்தை பகுதிக்கு வருவதற்கு ஏனைய மக்களும் வியாபார சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி குறித்த வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான சபையின் தீர்மானத்தை சபைத் தலைவர் சுசந்த பெரேரா வென்னப்புவ பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று .எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்களின் வர்த்தக நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டது.


வீடுகளும் உடமைகளும் சேதமாக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இந்நிலை தற்போது வரை தொடர்கிறது என்பதற்கு தங்கொட்டுவ வாரச் சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு வியாபார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top