அமைதி ஒழுக்கப் பண்பாட்டையும் கொண்ட
நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிள்ளைகளுக்கும்
சிறந்த கல்வியை வழங்க வேண்டும்
ஜனாதிபதி

அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒழுக்கப் பண்பாட்டையும் அமைதியையும் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று (28) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இன ரீதியாக பிரிந்து வேறுபட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வது எந்தவொரு இனத்திற்கும் நல்லதல்ல என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் நாட்டின் அனைத்து இனங்களும் சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழக்கூடிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 280 இலட்ச ரூபா செலவில் தம்பாளை அல்-ஹிலால் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று மாடி விஞ்ஞான ஆய்வுகூடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார்.

பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க கல்லூரியின் அதிபர் வஹாப்தீன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top