மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் மைத்திரி
வழங்கப்பட்டது கட்சியின் மத்திய குழு ஒப்புதல்!



மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவையே ஜனாதிபதி வேட்பாளராக இறக்குவதற்கு அவர் தலைமைவகிக்கும் அந்தக் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது என்றும் அதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மஹிந்த தரப்புக் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான அரசியற் கூட்டணி தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து தயாசிறி ஜெயசேகர மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்ததுடன் பேச்சுவார்த்தையினை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து பெரமுனவுடனான பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கான குழுவிற்கு நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் போட்டியிடவேண்டுமென அனைத்து உறுப்பினர்களும் கோரிக்கை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைக்கு மத்திய செயற்குழு ஒப்புதலும் அளித்தது.

இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top