ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக
கூறப்படும் நிலையில்
கோத்தாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்
புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகள்


முன்னாள் பாதுகாப்புச் செயலார் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன், நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தலைமையிலான படையினர் மற்றும் பொலிஸார், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுத்தினர் என்று, மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல என, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோத்தாபய ராஜபக்ஸவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது,

கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களிலும், பொலிஸ் நிலையங்களிலும், ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க சட்டவாளரான ஜோன் உலி தொலைபேசி அழைப்புக்கோ, மின்னஞ்சல் கேள்விக்கோ  உடனடியாக பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம்,  கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார், இவர் இலங்கை வந்திருந்த போது கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குஉட்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, எட்டுத் தமிழர்கள் மற்றும் இரண்டு சிங்களவர்கள் என பத்து பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை அவர் அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக் கொண்டார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார், மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்.” என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவை தலைமையகமாக கொண்ட அனைத்துலக உண்மை நீதிக்கான திட்டம், அனைத்துலக சட்ட நிறுவனமான Hausfeld உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸ போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top