பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை
இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது
விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் றிசார்ட்



அந்நிய மதத்தினரை கொலை செய்யுமாறோ, தற்கொலை தாக்குதல் நடந்துமாறோ, இப்படியான கீழ்த்தரமான வேலைகளை செய்யுமாறோ இஸ்லாம் சமயத்தில் கூறப்படவில்லை எனவும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களை இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் ஐ.எஸ். அமைப்பை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த அமைப்பினரை நாட்டில் இருந்து ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு றிசார்ட் பதியூதீன் பதிலளித்தார்.

கேள்வி - சதோச வாகனங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

பதில் - கடந்த ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தில் இணையுமாறு தொடர்ந்தும் என்னை கோரிய போதும் நான் போகவில்லை. இதனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என் மீது குற்றம் சுமத்தி வருகிறார்.

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதனை கூறியுள்ளார். இந்த பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்வார்கள் என நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எனினும் முறைப்பாடு செய்யப்படவில்லை. நான் அவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.

கேள்வி - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு தடையேற்படுத்திய குற்றம் சுமத்தப்படுகிறது. முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஆலோசகர் ஒருவரின் மகன் தொடர்பாக இராணுவ தளபதியுடன் பேசினீர்களா?.

பதில் - அரச நிர்வாகத்துறையின் முதல் தர அதிகாரி. மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சராக பதவி வகித்த போது, அவர் அந்த அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

1990ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றிய பின்னர் நாங்கள் புத்தளத்தில் முகாம்களில் இருந்த போது, புனர்வாழ்வு பணிப்பாளராக அவர் கடமையாற்றினார்.

தனது மகனை இனந்தெரியாதவர்கள் அழைத்துச் சென்றதாக அவர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அவரது மகன் தம்மிடம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் தம்மிடம் இல்லை எனக் கூறியுள்ளனர். இதன் பின்னர் அவரது எனது வீட்டுக்கு வந்து அழுதவாறு தனது மகன் எங்கு இருக்கின்றார் என்று தேடி தாருங்கள் என என்னிடம் கோரினார்.

நான் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விசாரித்தேன் தேடி வருவதாக அவர் கூறினார். தெஹிவளை பிரதேசத்திற்கு பொறுப்பான டி.ஐ.ஜி. விக்ரமசிங்கவிடமும் விசாரித்தேன் அவரும் தாம் கைது செய்யவில்லை எனக் கூறினார்.

இதனையடுத்து நான் இராணுவ தளபதியை தொடர்புக்கொண்டு கேட்டேன் தேடிப்பார்ப்பதாக கூறினார். விசாரிக்குமாறு என்னை தொடர்ந்தும் வற்புறுத்தினார். மீண்டும் இராணுவ தளபதியை தொடர்புக்கொண்டு கேட்டேன்.

தேடிப்பார்த்து கூறுவதாக அவர் சொன்னார். இதன் பின்னர் 28 ஆம் திகதி மீண்டும் இராணுவ தளபதியிடம் பேசினேன். இராணுவத்தினர் கைது செய்துள்ளதாகவும் பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்தார். இதன் பின்னர் நான் இராணுவ தளபதியை தொடர்புக்கொள்ளவில்லை.

குறித்த அதிகாரியின் மகனுக்கு என்ன நடந்தது என்பதை அறிய வேண்டிய தேவை மட்டுமே எனக்கு இருந்தது. மகன் உயிருடன் இருக்கின்றாரா இல்லை என்பதை அறியும் தேவையே தந்தைக்கு இருந்தது. இராணுவத்தின் பொறுப்பில் இருப்பதை அறிந்துக்கொண்ட பின்னர் நான் மீண்டும் தொடர்புக்கொள்ளவில்லை எனவும் றிசார்ட் பதியூதீன் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top