தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர்
ஆனந்த சங்கரி தமிழின துரோகி
5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால்
எம்மை நீக்கினார்கள்.
-   கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ்

 5 இலட்சம் பணம் கேட்டு கொடுக்காததால் எம்மை நீக்கினார்கள் என ஆனந்தசங்கரி உட்பட அவரது   சகாக்கள்  மீது அடுக்கடுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின்  நீக்கப்பட்ட உறுப்பினர்களான   கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் குற்றம்சுமத்தியூள்ளனர்.

கல்முனை மாநகர சபையின் பிரதிமேயர் அலுவலகத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

காத்தமுத்து கணேஸ் மற்றும் சுமித்ரா ஜெகதீசன் ஆகியோர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா மற்றும் கட்சி உறுப்பினர் வெள்ளிமலை எங்களை  சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பு கொண்டு  5 இலட்சம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரினார். நாம் அதற்கு எம்மிடம் இல்லை.ஏழை என்றோம்.வீட்டிற்கு வந்து பார்த்தால் தெரியும் என்றோம்.கேட்ட பணம் எம்மிடம்  இல்லையென்றோம். அதனால்தான் எங்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர் இவ்வாறு  பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்திய இவ்விருவரும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரியை  தமிழின துரோகி என வர்ணித்தனர்.

  பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தேரிவித்துள்ளதாவது,

கல்முனையில் 41 வருடங்களின் பின்னர் நான்தான் பிரதி மேயராக தெரிவாகினேன். இது எனக்கல்ல, தமிழ் மக்களின் வெற்றியாகும்.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலிற்கு முன்பு எனது சொந்தப்பணத்தில் கட்சி செயலாளரை இங்கு வரவழைத்து, சொந்த பணத்தில் மேடையமைத்து அவரை பேச வைத்தேன்.எனக்கும் கட்சிக்குமிடையில் எந்த பிரச்சனையுமில்லை.

 இப்பொழுது சிலரது கதையை கேட்டு எங்களை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.அதிர்ச்சியடைந்தோம். கல்முனை பிரதேச செயலக பிரச்சனை வந்ததன் பின்னர்,  நாங்கள் முஸ்லிம்களுடன் நெருக்கமாக இருக்கிறோம் என சொல்லியுள்ளனர்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சங்கையா என்னிடமும் பதவி நீக்கப்பட்ட மற்ற உறுப்பினரிடமும் தலா 5 இலட்சம் ரூபா பணம் கேட்டார். அப்படி தர என்னிடம் பணம் இல்லை என்றேன். மீண்டும் தொலைபேசியில் கேட்டார். இல்லையென்றேன்.

கடந்தமாதம் மட்டக்களப்பில் தங்கியிருந்த ஆனந்தசங்கரி, எங்களை அங்கு வரச்சொன்னார். எங்களை மாகாணசபை தேர்தலில் போட்டியிட கேட்டார். நாம் மறுத்தோம். பின்னர் துக்கமான செய்தியொன்றை சொல்லப் போவதாக கூறி, உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து தானாக விலகும் கடிதத்தில் கையொப்பமிட கேட்டார். நான் மறுத்தேன். கைப்பையை எங்களை நோக்கி எறிந்தார். நாம் எழுந்து வந்து விட்டோம்.


இப்பொழுது எங்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை விட்டுள்ளார்கள். இதில் ஆனந்த சங்கரியை  அவர் ஒரு பெரிய தலைவர் என  இதுவரை நினைத்திருந்தேன். அவர் தமிழர்களிற்காக உழைக்கிறார் என நம்பி இருந்தேன்.ஆனால்  அவர் துரோகம் செய்கிறார் .தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி என்பவர்  தமிழின துரோகி என்பது இப்பொழுதுதான் எனக்கு  தெரிந்தது  என்றார்.

மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜெகதீசன் தேரிவித்துள்ளதாவது,

நான் தேர்தலில்  போனஸ் முறையில் தெரிவானேன்.கட்சிக்கு இன்று வரை  எதிராக செயற்பட்டது கிடையாது.ஊடகங்கள் வாயிலாகவே எனது பதவி நீக்கிய அதிர்ச்சி  செய்தியை அறிந்தேன்.எம்மிருவரையும் கட்சி செயற்பாட்டில் இருந்து விலக்கியுள்ளதாக அதில் அநியாயமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து  அறிவித்துள்ளார்கள்.எமது  மக்கள் எமக்காக வாக்களித்தவர்கள் ஆனந்த சங்கரியின் கட்சிக்காகவோ அவருக்காகவோ  எமது மக்கள் வாக்களிக்கவில்லை.பிரதி மேயர் பதவி என்பது  எமது கட்சி தலைவரின் ஆலோசனையின் பிரகாரம் பெறப்பட்டது இதே நேரம்  கூட்டமைபிபினரிடம் எவ்வித தொடர்புகளையும் பேண வேண்டாம் என தலைவர் எம்மிடம்  கூறியுள்ளார்கள்.நாங்கள் எந்த பிழையும் செய்யவில்லை.எனவே என்னை கட்சியில் இருந்து நீக்கினால்  கிழக்கு தமிழ் ஒன்றியத்தில் எதிர்கால  அரசியலை நான் மேற்கொள்ள இருக்கின்றேன்.கட்சியின்  கொள்கைபரப்பு செயலாளர் சங்கையா என்கின்ற நபரும்  வெள்ளிமலை என்பவரும் 5 இலட்சம் பணத்தை என்னிடம் சில மாதங்களுக்கு முன்னர்  கேட்டார்கள்.வங்கி இலக்கமும் அனுப்பி வைத்தார்கள்.நீங்கள் கேட்கும் பணம் என்னிடம் இல்லை என்று கூறினேன்.


ஆனால் பாசிக்குடாவில் நான் பணம் பெற்றதாகவே நினைத்து தான் இவ்வாறு கேட்டார்கள்.ஆயினும் எனது நிலைமையை அவர்களிடம் கூறி அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காததினால் தான் எம்மை கட்சியில் இருந்து விலக்கியுள்ளார்கள் என புரிகின்றது  என்றார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top