சஹ்ரானின் மனைவியிடம்
மூடிய அறையில் விசாரணைகள்
வெளிவந்த சில தகவல்கள்

விசாரணை ஒன்றுக்காக அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் மூடிய அறையில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று காலை சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மற்றும் அவரது 3 வயதுக் குழந்தை முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவியை பொலிஸ் பரிசோதகர் பஸீல் கல்முனை நீதிமன்ற நீதிபதி .என். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.

இவ்வாறு ஆஜர் படுத்தப்பட்ட சஹ்ரானின் மனைவி தொடர்பான விசாரணை நீதிவானின் மூடிய அறையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த இவ்விசாரணையில் 3 சாட்சியாளர்கள் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும் எவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை ஊடகங்களுக்கு அறிவிக்க பதிவாளர் தயக்கம் காட்டினார்.

பின்னர் ஷஹ்ரானின் மனைவி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கும் சிறிது நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விடயங்களையும் தான் அறிந்த தாக்குதல் விடயங்களையும் அந்த வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்தொகுதியில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்து உயிர் தப்பிய சஹ்ரானின் மகளான பாத்திமா ருஸையா(வயது-3) நீதிமன்ற வளாகத்திலும் பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் செல்லமாக விளையாடி கொண்டிருந்தார்.

மேற்குறித்த விசாரணைகளை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை அன்று அவர் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளார்.

இதையடுத்து சஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) மற்றும் மகள் ஆகியோர் மீண்டும் கொழும்பு நோக்கி குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top