தங்கொட்டுவ வாராந்த சந்தையில்
முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தடை
வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு
நீதிமன்றம் அழைப்பாணை

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு தற்காலிகமாக தடை விதித்து எழுத்துமூலம் அறிவித்துள்ள வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் உட்பட ஆறு பேருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கே. வி. சுசந்த பெரேரா (பொதுஜன பெரமுன) கடந்த 24ஆம் திகதி தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இந்த அறிவித்தலில் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வருவதை தற்காலிகமாக தடை செய்யுமாறு அறிவித்திருக்கிறார்.

எழுத்து மூலமான இந்த அறிவிப்பு சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

தங்கொட்டுவ பொலிஸ் பொறுப்பதிகாரி திலின ஹெட்டியாராச்சி, தமது உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்தாலோசித்து நீதிமன்றத்தை நாடுவதென முடிவு செய்துள்ளனர்.


இதன்படி மாரவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்தனர். வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் இக்கடிதம் தொடர்பில்விளக்கம் கோருவதற்காக பிரதேச தலைவர் உட்பட ஆறுபேரை எதிர்வரும் 28ஆம் திகதி மாரவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் கே..வி. சுசந்த பெரோவிடம் கேட்டபோது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எழுந்தன. இதன்படி முஸ்லிம் வர்த்தகர்கள் வாராந்த சந்தைக்கு வருவதை பிரதேசத்திலுள்ள மதத் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் சக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதன்படியே தற்காலிகமாக முஸ்லிம் வர்த்தகர்களை வாராந்த சந்தைக்கு வருவதை தடை செய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாராந்த சந்தைக்கு வரவில்லை. அவர்களை பொலிஸாரே மீண்டும் அழைத்து வந்தனர். இதன் காரணமாக சில பிரச்சினைகள் தோன்றின. பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு அமையவே முஸ்லிம் வர்த்தகர்களை தற்காலிகமாக வருவதை தடுக்குமாறு எழுத்து மூலம் அறிவித்தேன்.

இவ்வாறான தீர்மானம் தற்காலிகமாக எடுக்கப்பட்டதொன்று. எதிர்வரும் ஜூலை மாதம் அனைத்து மதத் தலைவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் ஆகியோரை அழைத்து ஒரு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல சபை அமர்விலும் பேசப்படும். இதன்போது நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியும். ஒரு பாரிய மோதலை தடுப்பதற்காகவே நான் இதனை செய்தேன். எனக்கு கிடைத்த கடிதங்கள் அனைத்தையும் என்னால் காண்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வென்னப்புவ பிரதேச சபையின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் சபைத் தலைவரின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என வென்னப்புவ பிரதேசத் சபை எதிர்க் கட்சித் தலைவர் ஷிரோன் பெர்னாந்து தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக இந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். சிறிய அளவிலேயே அவர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். இவர்களுடைய இந்த வர்த்தகம் தொடர்பில் இந்த மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒருசிலர் மட்டுமே இதன் பின்னணியில் இருக்கின்றனர். இவர்களின் வலையில் பிரதேச சபைத் தலைவர் விழுந்துள்ளார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்ஜகத் பிரியங்கர தெரிவிக்கையில்,

இந்த தீர்மானம் வென்னப்புவ பிரதேச சபையின் தீர்மானமல்ல. கடந்த திங்களன்று பொலிஸாரின் பாதுகாப்புடன் தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய வந்தபோது அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே தற்காலிகமாக தலைவர் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்த வர்த்தகர்கள் அப்பாவிகள். இவர்களை சந்தைக்கு வரவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. என்றாலும் சந்தைக்குள் இருக்கும் பெரும்பாலான வர்த்தகர்கள் இவர்கள் வருவதை விரும்பவில்லை. இவர்களை வரவிடவேண்டாம் என்று தெரிவிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

வென்னப்புவ பிரதேச சபையின் தலைவரின் தீர்மானம் கட்சியின் தீர்மானமல்ல. அவரது செயல் மனித உரிமைகள் மீறும் செயலாகவே நான் கருதுகின்றேன். இது தொடர்பாக கட்சிக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் வென்னப்புவ பிரதேச சபைத் தலைவருடனும் பேசிய பின்பு எழுத்து மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட கடிதத்தை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவரின் இந் நடவடிக்கையை ஜேவிபியின் புத்தள மாவட்ட இணைப்பாளர் அஜித் கிஹான் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top