அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில்

முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நேற்று (01.09.2015) மாலை அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வா குழு செயலாளர் அஷ் ஷெய்க் ஹாஷிம் சூரி அவர்களின் நெறியாழ்கையின் கீழ் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நூர்ஆமித் அவர்களின் கிராஅத் பாராயணத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அஹ்மத் முபாறக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் போது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போதும் பல்வேறு வேலைப் பளுவிற்கு மத்தியிலும் இங்கு சமூகமளித்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிதளையும் வரவேற்று, கடந்த காலத்தில் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளாக இருந்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பணியாற்றிய முஸ்லிம் பிரதிநிதிகள் பற்றியும் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்புகள் பற்றியும் பல ஆலோசனைகள் கூறி வரவேற்புரையை நிகழ்த்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜம்இய்யாவின் பிரதி தலைவர்களில் ஒருவரான அஷ் ஷெய்க் .சீ அகார் முஹம்மத் அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பொறுப்புகள், கடமைகள் குறித்து இரத்தினச் சுருக்கமாகத் தெளிவுபடுத்தியதுடன் பாராளுமன்ற பிரதிநிதிகள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய காத்திரமான பணிகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பணிகளை முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, ஒருவரையொருவர் மன்னித்து, சகோதரத்துவத்துடனும் விட்டுக்கொடுப்புடனும் தாராளத் தன்மையுடனும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அனைவரும் அல்லாஹ்வின் பால் தவ்பா செய்து மீள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும் இன்று நாடு எதிர்கொண்டிருக்கின்ற சவால்கள் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கின்ற சவால்கள் குறித்தும் சுருக்கமாக தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்உங்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் வழங்கப்படுகிறது. அது ஒரு வாழ்த்துக் கேடயமாக மட்டுமல்லாமல் அதிலே 11 விடயங்கள் குறிப்பிடப்பட்டு சில வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உங்களது வாழ்வில் எடுத்து நடந்தாலே இன்ஷா அல்லாஹ் பெரிய மாற்றங்களை எதிர் பார்க்கலாம்எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் முஸ்லிம் கவுன்ஸில் (MCSL) சார்பாக அதன் தலைவர் என்.எம் அமீனும் தேசிய சூரா கவுன்ஸில் (NSC) சார்பாக அஷ் ஷெய்க் எஸ்.எச்.எம் பழீல் அவர்களும் உரை நிகழ்த்தினர்.
பாராளுமன்ற பிரதிநிதிகள் சார்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தலைவர் ரஊப் ஹகீம் உரை நிகழ்த்தினார். நிகழ்வின் இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பற்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக இந்நிகழ்வு இரவு ஒன்பது மணியளவில் கப்பாரதுல் மஜ்லிஸுடன் நிறைவடைந்தது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top