உதவி முகாமையாளரின் கொலைக்கு நீதி கோரி
கல்முனையில் ஆர்ப்பாட்டம்
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய நிதி நிறுவனத்தின் உதவி முகாமையாளரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் நபருக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்பதுடன், அவருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாதெனவும்; கோரி கல்முனை நகர வீதியில் இன்று 14 ஆம் திகதி திங்கட்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்
1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் மேற்படி நிதி நிறுவனத்தில் கடமையிலிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அத்துடன், அப்பெண்ணின் கழுத்திலிருந்த தாலிக்கொடியும் அபகரிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், கொலையாளி எனக் கூறப்படும் நபரின் கொடும்பாவியும் பெற்றோல் ஊற்றி எரியூட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாகச் சென்று கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
குறித்த பேரணியில் அதிகளவான பெண்கள் அமைப்புக்களும் மாணவர் மீட்பு பேரவையும் கலந்துகொண்டதுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களும் அவரது 7 வயது மகளும் கலந்து கொண்டு தனக்கு அம்மா வேண்டும் என்ற கோசத்தினையும் எழுப்பியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment