அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி
மங்கையற்கரசி லண்டனில் காலமானார்!


தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவியும், 1960களில் நடந்த சத்தியாக்கிரக போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவருமான மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் (வயது 83) நேற்றுமாலை லண்டனில் காலமானார்.
லண்டனில் வசித்து வந்த, மங்கையர்க்கரசி நேற்றுமுன்தினம் கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை காலமானார்.
அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் நாட்டில் இருந்து வெளியேறி தமிழகத்திலும் பின்னர் லண்டனிலும் வசித்து வந்தார்.
மங்கையர்க்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார். இராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர் பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கத்தை மணந்தார்.
அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையர்க்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.
இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.
இந்திய அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோருடன் மங்கையர்க்கரசி உறவுகளைப் பேணி வந்தார்.
காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்குகள் லண்டனில் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறும் என்று டாக்டர் பகீரதன் தெரிவித்துள்ளார்.
பகீரதன் தவிர மங்கையர்க்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top