10 வருடங்களாக மூன்றாம்படை கிணற்று வீட்டில்
மறைந்து வாழ்ந்த செல்வந்தரான பொறியியலாளர் மரணம்!
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் சுமார் பத்து வருடங்களாக, வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் தன்னந்தனியனாக வாழ்ந்து வந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
காரைதீவைச் சேர்ந்த பவளன் என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் (வயது 57) எனும் பொறியியலாளரே இவ்விதம் மரணமானவராகும்..
இவர் இருவாரங்களுக்கு முன்பு மரணித்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஏனெனில் சடலம் உருக்குலைந்தநிலையில் காணப்பட்டது. இவரின் சடலம் நேற்று முன்தினம் சம்மாந்துறைப் பொலிஸாரின் விசாரணையின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்தவர் பற்றி அவரது உறவினர்கள் கூறியதிலிருந்து தெரியவருவதாவது,
காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை நடேசானந்தம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றவர். பட்டப்பின்படிப்பின் பின்பு சீறா நிறுவனத்தில் பணியாற்றிருந்தார். திருமணமாகவில்லை.
பின்பு காயத்திரி மந்திரத்தில் பற்றுப்பிடித்த அவர் அவரது சகோதரியின் வீட்டின் வெளிச்சமின்றிய அறையில் தனிமையாக தியானத்தில் வாழ்ந்து வந்தார்.
மரண சந்தேகங்கங்களுக்கான காரணங்கள்!
இத்தொடர்புகள் கடைசி ஒருவாரம் தடைபட்டிருந்ததாகவும் அவருக்கு செல்லும் குழாய்நீர் மானி (இது வீட்டிற்கு வெளியிலிருக்கிறது) வேலை செய்யாமலிருந்ததாகவும் வழமையாக வெளியில் எரியும் மின்குமிழ்கள் எரியாமலிருந்ததாகவும் வீட்டைச்சுற்றி ஒருவித துர்நாற்றம் வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து வியாழனன்று காலை அவரது உறவினரொருவர் இவர் வாழ்ந்து வந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் பிணமாக கட்டிலின் குறுக்காக கிடந்தாராம். ஆனால் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசியநிலையில் கிடந்தார். பொதுமக்கள் பலரும் சென்று பார்த்துள்ளனர்.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் வந்து பார்வையிட்டு மாலை நீதிவான் வரும்வரை பாதுகாப்பாக இருந்து நீதிவானின் உத்தரவிற்கமைய சடலத்தை மேலதிக சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாறைக்கு அனுப்பிவைக்கத் தயாரானார்கள்.
பெருந்திரளான பொதுமக்கள் இச்சம்பவத்தை கேள்வியுற்று இவ்விடத்தில் கூடியிருந்தனர். மரணித்தவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் கூடியிருந்தனர். வெண்ணிற பொலிதீனினால் சுற்றப்பட்ட சடலத்தை கொண்டு செல்லும் போது கவலையுடன் கதறியழுதனர்.
மாலை 6.20மணியளவில் சிறிய லொறியில் சடலம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையிலிருந்த செல்வந்தரான இவர் சிலவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் சகல விசாரணைகளும் பரிசோதனைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
57 வயதுடைய பொறியியலாளரான இவர் ஏன் இவ்வாறு 10 வருட காலம் வெளியுலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்துவந்தார் என்பது இன்றும் இன்னும் மக்கள் மத்தியில் புரியாத புதிராகவுள்ளது.
சிலவேளை மெழுகுதிரி மட்டும் எரியுமாம். சூரியஒளி புகாவண்ணம் கும்மிருட்டிலே நிர்வாணமாக தியானத்திலிருந்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கான உணவு ஒரு வழியால் அனுப்பட்டு வந்தது.
சுனாமியின் பின்பு அவர் தனக்கென பிரத்தியேகமாக அவரால் வடிவமைக்கப்பட்ட கிணறு வடிவமான பெரிய வீடொன்றை காரைதீவு பொது நூலகத்திற்கருகாமையில் காத்திரமாக நிர்மாணித்தார். அவ் விசித்திரமான வீடு மூன்று படைகளை அதாவது 3 சுவர்களை கொண்டு கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. குழாய்நீர் வசதி மின்சார வசதி சகலதும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வீட்டினுள் அவர் 2007 அளவில் குடியேறி இறக்கும்வரை சூரியவெளிச்சமின்றி தன்னந்தனியனாக வெளியுலகத் தொடர்பின்றி வாழ்ந்து வந்திருக்கின்றார். அவருக்குத் தேவையான உணவுகள் அவரின் உறவினரால் ஆனால் ஒருவரால் மட்டும் குறிப்பிட்டவழியால் வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கலுக்காக ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இறக்கும் வரை யாருமே உட்செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு தடவை விசேட அதிரப்படையினர் தேடுதலின் போது சென்றுவந்ததாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது.
இறுதிக்காலகட்டத்தில் அவர் தானே சமைத்து உண்பதாக தெரிவித்தமையினால் உணவுப்பொருட்கள் கொள்வனவின் நிமித்தம் கடைக்காரரொருவருக்கும் இவருக்கும் தொடர்பிருந்துள்ளது. இதுதவிர உறவினரொருவரிடமும் செல்போனில் பேசுவாராம்.
0 comments:
Post a Comment