சிங்கள ஆசிரியைக்கு ஜிஹாத் அமைப்புகடிதம்
புலனாய்வுத் துறை கண்டுபிடிக்கட்டும்
-
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
கண்டி, மடவலப் பிரதேசத்தில் ஜிஹாத் அமைப்புக்கள் இருந்தால், புலனாய்வுத் துறை விசாரணைகளை நடாத்தி சந்தேகநபர்களைக் கண்டுபிடிக்கட்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மடவலப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்களை வெளியேறுமாறு கூறி ஜிஹாத் அமைப்பொன்றினால் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவில் குறித்த ஆசிரியை ஒருவரின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது அப்பிரதேசத்தில் மாத்திரமல்ல, இந்த நாட்டிலும் இனவாதத்தை தூண்டும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்ட சிங்கள ஆசிரியையொருவருக்கும் அப்பகுதியிலுள்ள பெற்றார்கள் சிலருக்கும் இடையில் நடைபெற்ற சம்பவத்துக்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்கையில் ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இனவாதத்தை தூண்டி விட சிலர் முயற்சிக்கின்றனர். நாம் சொல்கின்றோம். கண்டிப் பகுதியில் எந்தவொரு ஜிஹாத் அமைப்பும் இல்லை. இதனை இன்னும் ஊர்ஜீதம் செய்ய வேண்டுமானால், புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்கட்டும்.
இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்பிவிட்டு, அப்பாவி சிங்கள மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் இனவாதப் பீதியை உருவாக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த சம்பவம் கண்டியுடன் மாத்திரம் தொடர்பானதாக பார்க்கப்பட வேண்டும். மாறாக, முழு நாட்டிலுமுள்ள முஸ்லிம்களுடன் இதனைத் தொடர்புபடுத்தக் கூடாது. அவ்வாறு தொடர்புபடுத்த சிலர் முயற்சிப்பது கவலையளிக்கின்றது எனவும் அமைச்சர் இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment