ஈரானில்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு
ஈரானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் சனிக்கிழமை பதவியேற்றனர்.
290 உறுப்பினர்கள் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு அண்மையில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரெளஹானி முன்னிலையில் பதவியேற்றனர்.
நாடாளுமன்ற அவையில் புதிய உறுப்பினர்களிடையே ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
அதில் அவர் குறிப்பிட்டதாவது: ஆணவம் மிகுந்த மேற்கத்திய நாடுகளின் சதித் திட்டங்களை முறியடிக்கும் கோட்டையாக நமது நாடாளுமன்றத்தை திகழச் செய்வது உங்கள் அனைவரின் சட்டபூர்வமான கடமை மட்டுமல்ல, நமது நாட்டில் நிகழ்த்தப்பட்ட புரட்சியின் கீழிலான கடமையுமாகும் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான தேர்வு அடுத்த ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி
ஹஸன் ரௌஹானிக்கு ஆதரவான மிதவாதிகள் 133 இடங்களை வென்றனர். பழைமைவாதிகள்
125 இடங்களை வென்றனர்.
தனிப் பெரும்பான்மைக்கு சற்றுக் குறைவான எண்ணிக்கையில் மிதவாத உறுப்பினர்கள் இருந்தாலும், ஆட்சியை நடத்திச் செல்வதில் சீர்திருத்தவாதியான ஜனாதிபதிக்கு சிக்கல் இருக்காது என நம்பப்படுகிறது. அந்நாட்டில் இஸ்லாம் மதப் புரட்சிக்குப் பிறகு அமைந்த நாடாளுமன்றம் மத குருக்களின் ஆதிக்கம் நிறைந்ததாக இருந்தது.
தற்போதைய தேர்தலுக்குப் பின்னர், மத குருக்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களாக உள்ளனர். தற்போதைய நாடாளுமன்றத்தில் 17 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். அதே சமயத்தில் மத குருக்கள் எண்ணிக்கை 16 ஆகும். இதில் 3 பேர் சீர்திருத்தவாதிகள். மதப் புரட்சிக்குப் பிறகு 1979-இல் அமைந்த நாடாளுமன்றத்தில் 164 மத குருக்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாடாளுமன்றங்களில் இந்த எண்ணிக்கை 153, 85,67,52,27 எனக் குறைந்து வந்துள்ளது.
0 comments:
Post a Comment