புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன
மதுசார மற்றும் புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசு மிகத் தெளிவானதும் நேரடியானதுமான தீர்மானங்களை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35% வீதம் மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றிற்கு செலவிடப்படுவதுடன் இது நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், இது தொடர்பாக அரசு மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று 31 ஆம் திகதி முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு தின வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புகைத்தலுக்கு எதிராக நாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நாட்டில் புகை பிடிக்கும் ஆண்களின் தொகை சுமார் 5% வீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், இந்நிலைமையை மேலும் விருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.
வர்த்தக துறையின் தந்திரோபாயங்கள் மற்றும் மக்களை கவரும் விதமான விளம்பரங்களினால் எமது இளைஞர் சமுதாயம் வழி தவறி செல்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், இவற்றை தோற்கடிப்பதற்காக கைகோர்ப்பது அனைவரதும் பொறுப்பாகுமெனத் தெரிவித்தார்.
எமது நாட்டின் பெயரை உள்ளடக்கியதாக இலங்கை புகையிலை கம்பனி செயற்பட்டபோதும் எமது நாடு இதன் பங்காளராக செயற்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான வருமான மார்க்கங்களுக்காகவும் அரசு பணியாற்ற மாட்டதென வலியுறுத்தினார்.
அன்று சிகரெட் பக்கட்டில் சுகாதார எச்சரிக்கையை 80% வீதமாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையில் கதிரைகளில் அமர்ந்திருந்த புகையிலை கம்பனிகளின் பணிப்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளிப்பதற்கு நேர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், இதனை நாட்டு மக்கள் அவதானத்துடன் நோக்கியதன் காரணமாக தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சின்னங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் வழங்கிவைத்தார்.
அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரணாந்துபுள்ளே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment