சம்பூர் நிகழ்வுக்கு மனவருத்தம் தெரிவித்தும்,
இராணுவத்தின் முடிவைக் கண்டித்தும்
கிழக்கு முதலமைச்சர்
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதம்
சம்பூர் பாடசாலை நிகழ்வு தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் மனவருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் கல்வித்துறை என்பது மாகாண சபையின் விவகாரம் என்பதை அவர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மாகாண சபை மற்றும் மாகாண கல்வி அமைச்சர் தண்டபாணியின் அனுமதியின்றி தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், பாடசாலையின் முன்னேற்றத்துக்கு கடற்படை உதவியமை குறித்து முதலமைச்சர் தனது பாராட்டுகளை கூறியுள்ளார்.
கடற்படையின் குறித்த செயற்பாட்டை பாராட்டும் வகையில் தானும் மாகாணக் கல்வி அமைச்சர் தண்டபாணியும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட போதிலும் ஆளுனர் மற்றும் அமெரிக்கத் தூதவரை மட்டுமே நிகழ்வு நடைபெற்ற மேடைக்கு அழைத்தது மட்டுமன்றி, தன்னையும் கல்வி அமைச்சரையும் உடல்ரீதியாக இடையூறு செய்து தள்ளிவிட்டதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தங்களை மேடையை விட்டு அகற்றிவிட்டு அந்த இடத்தை குறித்த கடற்படை அதிகாரி எடுத்துக் கொள்ள முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அரசாங்கத்தின் நியம மரியாதை முறை (புரோட்டோகோல்) குறித்து கடற்படை அதிகாரிக்கு தான் விளக்கமளிக்க நேர்ந்ததாக முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தை விடுவிப்பதற்கு கடற்படையினர் பாரிய பங்காற்றியிருப்பதாக இராணுவத்தரப்பில் சுட்டிக்காட்டியுள்ளமை தொடர்பாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அது குறித்து கிழக்கு மக்களின் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
எனவே சம்பூர் சம்பவம் தொடர்பில் தனது மனவருத்தங்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும்,இச்சம்பவத்தை முன்னிட்டு இராணுவத்தினர் தனது வைபவங்களை புறக்கணிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும் முதலமைச்சர் நஸீர் அஹமத் கடுமையாக கண்டித்துள்ளார்.
0 comments:
Post a Comment