கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
உலகம் முழுவதும் எதிர்ப்பு




அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லா கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற  அந்த கொரில்லாவை சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் திறந்தவெளிக் கூண்டில் ஹராம்பே என்னும் 17 வயது ஆண் கொரில்லா அடைக்கப்பட்டிருந்தது.
 அந்தக் கூண்டின் தடுப்புச் சுவரில் இருந்த சிறு இடைவெளி வழியாக கூண்டுக்குள் நுழைந்த 4 வயதுச் சிறுவனை கொரில்லா இழுத்துச் சென்றது. அச்சிறுவன் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் கூண்டிலிருந்து மீட்பதற்காக, அந்த கொரில்லாவை உயிரியல் பூங்கா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
 இந்த நடவடிக்கைக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 கொரில்லாவை மயங்கச் செய்யும் விதத்தில் அதை சுட்டிருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 கூண்டுக்குள் விழுந்த சிறுவனை இழுத்துச் சென்ற கொரில்லா, அவனை எந்த விதத்திலும் துன்புறுத்தியதாகத் தெரியவில்லை. அந்த திறந்தவெளிக் கூண்டில் சுமார் 10-15 நிமிடங்களுக்கு மேல் சிறுவன் சிக்கியிருக்கவில்லை. இந்நிலையில், கொரில்லாவை சுட்டுக் கொல்ல அவசர முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஹராம்பே என்கிற அந்த அரிய வகை கொரில்லாவுக்கு ஆதரவாக "ஹராம்பேவுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என்கிற ஃபேஸ்புக் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.                

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top