சவூதி அரசுடன் எந்த உடன்படிக்கையும் எட்டப்படாததால்,
இவ்வாண்டு ஈரானியர்களின் ஹஜ் பயணம் கேள்விக்குறி
ஈரானைச் சேர்ந்தவர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது இவ்வா ண்டில் கேள்விக்குறியாகியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித இடமான மக்கா - மதீனா சவூதியில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணத்தை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது தொடர்பாக சவூதி அரசுடன் எந்த உடன்படிக்கையும் எட்டப்படாததால், ஈரானிலிருந்து எவரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ஈரான் கலாசாரத் துறை அமைச்சர் அலி ஜன்னதி கூறியுள்ளார்.
ஈரானிலிருந்து ஹஜ் புனிதப் பயண விவகாரங்களை அந்நாட்டு கலாசாரம் அமைச்சு கையாண்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் அலி ஜன்னதி தெரிவித்துள்ளதாவது:
ஹஜ் புனிதப் பயணம் இவ்வாண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஈரானிலிருந்து செல்லும் புனிதப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது தொடர்பாக, சவூதி அரசுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவற்றில் எந்த முடிவும் எட்டப்படவில்லை
யாத்ரிகர்கள் விவகாரத்தில் சவூதி அதிகாரிகள் தகுந்த மதிப்பளித்துப் பேசவில்லை. புனிதப் பயணிகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு (விசா) வழங்குதல், பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரானின் ஆலோசனைகளை சவூதி நிராகரித்தது. புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்தல் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக சவூதி போதிய ஒத்துழைப்பு அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதால், துரதிருஷ்டவசமாக ஈரானியர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர். கடந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பல நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இதில் 464 பேர் ஈரானியர்கள்.
இதேவேளை, ஈரான் நாட்டினர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி எந்த முட்டுக்கட்டையையும் ஏற்படுத்தவில்லை என்று சவூதி ஹஜ் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரசு செய்தி நிறுவனம் வழியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த அமைச்சு தெரிவித்துள்ளதாவது:
ஈரான் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாததற்கு அந்நாட்டு ஹஜ் குழுதான் பொறுப்பேற்க வேண்டும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளாமல் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது. சன்னி பிரிவு நாடான சவூதிக்கும், ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே சுமுகமான உறவு இருந்ததில்லை.
******************************
கடந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பல நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இதில் 464 பேர் ஈரானியர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
0 comments:
Post a Comment