முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறை

உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க  
இந்திய மத்திய அரசு முடிவு


முஸ்லிம்களின் தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்திய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனுடன் பொது சிவில் சட்டத்தை தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலாக் முறை தொடர்பான வழக்கில் மத்திய இந்திய அரசின் கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கான பதிலை சட்ட அமைச்சகம் இந்த மாத இறுதியில் முறைப்படி உச்ச நீதிமன்றத்தில் அளிக்க இருக்கிறது.
முன்னதாக, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்ட சாய்ரா பானு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அவர் கூறியிருந்தார். இதேபோல ஜெய்ப்பூர், கொல்கத்தாவைச் சேர்ந்த இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை எதிர்த்து ஜாமியத்-உலமா -ஏ-ஹிந்த், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. அதில், "சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படக் கூடாது. முஸ்லிம் தனிநபர் சட்டம் என்பது குர் ஆனில் இருந்து எடுக்கப்பட்டது. எனவே, அதனை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டது.

எனினும், பாரதிய முஸ்லிம் பெண்கள் அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடத்தியது. அதில், தலாக் முறையை ஒழிக்கக்கோரி 50 ஆயிரம் முஸ்லிம் பெண்களும், ஆண்களும் கையெழுத்திட்டனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top