எகிப்தில் தற்கொலைத் தாக்குதல்
10 பொலிஸார் பலி

10 killed in suicide blast at Egyptian police station

எகிப்தில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பொலிஸார் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
வடக்கு சினாய் பகுதியைச் சேர்ந்த அல்-ஆரிஷ் நகரில், வெடிபொருள் நிரப்பிய குப்பை லாரியை ஓட்டி வந்த பயங்கரவாதிகள், அதனை அந்த நகரில் அமைந்துள்ள காவல்துறை சாவடியில் மோதி வெடிக்கச் செய்தனர்.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்தத் தாக்குதலில் 10 பொலிஸார் உயிரிழந்தனர். மேலும், பொதுமக்கள் 4 பேரும், 18 பொலிஸாரும் காயமடைந்தனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குப்பை லாரியை அல்-ஆரிஷ் நகராட்சியிலிருந்து சில நாள்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் திருடினர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நிகழ்த்தப்பட்ட காவல்துறை சாவடிக்கு அருகே பொதுமக்கள் வசிப்பதால், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து ஜனாதிபதியா இருந்த ஹோஸ்னி முபாரக், புரட்சியின் மூலம் கடந்த 2011-ஆம் ஆண்டு பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதிலிருந்து, வடக்கு சினாய் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதற்குப் பிறகு அமைக்கப்பட்ட ஜனாதிபதி முஹம்மது மோர்ஸியின் தலைமையிலான மதவாத அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, ராணுவம் அவரை ஆட்சியிலிருந்து அகற்றியது.
அதனைத் தொடர்ந்து, வடக்கு சினாய் பகுதியில் பொலிஸார் மீதும், ராணுவத்தினர் மீதும் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top