புதிய முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

கட்சித்தலைவர்கள் பொது இணக்கப்பாடு


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவதற்கு, கட்சித் தலைவர் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 
புதிய தேர்தல் முறைமையில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால், அவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுகளை எட்டுவதற்கும் இந்தக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றத்து.
புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள தொகுதி எல்லை நிர்ணயத்தின் ஊடாக சிறுபான்மைக் கட்சிகளுக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் இது சிறுபான்மையினத்தினருக்கு அசாதாரணத்தை இழைக்கும் செயலென்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.  
இதேவேளை, புதிய முறைமையில் குளறுபடிகள் காணப்படுவதாகவும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்தினால் உசித்தமானது என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.   இதேவேளை, பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்தவேண்டாம் என்றும் புதிய முறையில் தேர்தலை நடத்துமாறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஸ் குணவர்தனவும் சுதந்திரக் கட்சியின் சார்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இதனையடுத்து, அக்கூட்டத்தில் கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்றும், எனினும், இரண்டு பிரதானக் கட்சிகளும் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது என்றும், ஏனையக் கட்சிகளும் அத்தீர்மானத்துக்கு இணங்கியுள்ளதாக அறியமுடிகின்றது. 
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதலான பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிசும் பங்கேற்றார்.

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், சமகால சட்டதிட்டங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றியும், சமகால சட்ட திட்டங்களின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் 56 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை பற்றியும் அங்கு  ஆராயப்பட்டது.

அவ்வாறே தொகுதிவாரி முறையின் கீழ் தேர்தலை நடத்துதல், பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இதனுடன் இணைந்ததாக எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சரிடம் ஒப்படைத்து, உள்ளுராட்சி தேர்தல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக இந்தக் எல்லை நிர்ணயக்குழுவானது எதிர்வரும் 23ஆம் திகதியன்று மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top