சைக்கிள் பந்தயத்தில்

105 வயது முதியவர் உலக சாதனை


சைக்கிள் பந்தய மைதானத்தில் நுழைவதற்கு முன்பே "எனக்கு இப்ப உடம்பு அவ்வளவு ஷேப்பா இல்லைங்க, அதனால என்னோட ரெக்கார்டை பிரேக் பண்றது கஷ்டம்தான்" என்று ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார் ராபர்ட் மர்சந்த்.
பிரான்ஸின் பிரசித்திபெற்ற சைக்கிளிங் மைதானத்துக்கு அந்த முதியவர் நுழைந்ததும், "ராபர்ட்... ராபர்ட்... ராபர்ட்... " என்று பார்வையாளர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். தொப்பை வைத்த இளைஞர்கள் வெட்கித் தலை குனிந்தனர். 30 வயதுக்குள் மூட்டுவலிக்கு மருந்து தடவும் மக்கள், மோசமான உடலை வைத்திருப்பவர்கள் மெளனமாகினர். அங்கே சைக்கிளிங் டிராக்கில், ராபர்ட் கம்பீரமாக தன்னுடைய 92-வது சுற்றை நிறைவு செய்ய, சைக்கிள் பெடல்களை மிதித்துக் கொண்டிருந்தார். அவர் சுற்றை முடித்த போது அரங்கத்தில் அவ்வளவு உற்சாகம். வயது வித்தியாசம் இன்றி எல்லோரும் எழுந்து நின்று தலை வணங்கினர். கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

"நான் அந்த 10 நிமிட எச்சரிக்கை மணியை கவனிக்கவே இல்லை. கவனித்திருந்தால் இன்னும் சில கிலோமீட்டர் ஓட்டி இருப்பேன். அதைவிட என்னுடன் வேறு யாராவது சைக்கிள் ஓட்டி இருந்தால், இன்னும் சிறப்பாக  பெர்ஃபார்ம் செய்திருப்பேன்" என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். இதில் இருந்து மீள்வதற்குள் "எனக்கு கால் வலிக்கலை. ஆனால், கைகளின் மூட்டுக்கள் மட்டும் கொஞ்சம் வலிக்குது " என்று தன் பயிற்சியாளர்களிடம் செல்லமாக புலம்புகிறார். "உங்க வயசு காரணமா மூட்டு வலிக்குது. அவ்வளவுதான்என, பயிற்சியாளர்களும் ராபர்ட்டை கூல் செய்தனர்
'ஒருவேளை நான் 30 கிலோ மீட்டர் ஓட்டி இருந்தா, ஊக்கமருந்து சோதனை பண்ண சொல்லி இருப்பீங்களே...’ என்று வந்தவர்களை வம்புக்கு இழுக்கிறார் அந்த தாத்தா.
பந்தயம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது, பலரின் மனதில் நிறைந்திருந்தார், பிரான்ஸ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்த 105 வயது ராபர்ட் மர்சந்த். கடந்த ஜனவரி 04, 2017-ல், 105 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், ஒரு மணிநேரத்துக்குள் 22.547 கிலோ மீட்டரை கடந்து உலக சாதனை படைத்திருக்கிறார் என்பதே, இந்த ஆரவாரத்துக்கான காரணம். இதே சைக்கிள் தாத்தா, 2011-ல்  100 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் 24.250 கிலோமீட்டரை கடந்து சர்வதேச சாதனை படைத்தார். வைத்த சாதனை பொறுக்காமல், மீண்டும் 2012-ல் தன்னுடைய சாதனையை தானே (26.927 கி.மீ.) பிரேக் செய்தார்இவரது சாதனைதான் மட்டுமல்ல, அவர் வாழ்க்கையும் வித்தியாசமானது..
ராபர்ட் மர்சந்த், பிரான்ஸ் நாட்டில், எமியன்ஸ் (Amiens) எனும் இடத்தில், 26 நவம்பர் 1911-ம் ஆண்டு பிறந்தவர்.  1930-களில் தீயணைப்புப் படையில் வேலை செய்தார். அப்போதுதான், இரண்டாம் உலகப் போர் நடந்தது. எதிர் நாட்டு ராணுவத்திடம் சிக்கி போர் கைதியாகக் கூட இருந்திருக்கிறார். பிறகு வெனிசுலா நாட்டில் டிரக் ஓட்டுநராக, கரும்பு விவசாயியாக, 1950-களில் கனடா நாட்டில் மரம்வெட்டுபவராக பல நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். மீண்டும் 1960-களில் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பி தோட்டக்காரராக, வொயின் டீலராக வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார். சைக்கிளிங் தொடங்குவதற்கு முன்பே, பாக்ஸிங், அத்லெடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸில் மாவட்ட, மாநில போட்டிகளில் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
1943-ல் ராபர்ட் தன் மனைவியை இழந்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள வில்லை. குழந்தைகளும் இல்லை. தனிக்கட்டை.
1946-ல் க்ராண்ட் பிரிக்ஸ் டி நேஷன்ஸ் போட்டியில், 7-வது நபராக பந்தய தூரத்தைக் கடந்தார். தோல்வி வலித்தது. சைக்கிள் போட்டிக்கு முழுக்கு போட்டார்ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? மீண்டும் தன் 67-வது வயதில் சைக்கிளிங் செய்யத் தொடங்கினார். அன்று மிதிக்கத் தொடங்கிய சைக்கிள் பெடல்கள் இன்னும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. புதுப்புது சாதனைகளும் அவரைத் தொடர்கிறது.
''எப்போதும் ராபர்ட் அதிகப்படியான பழங்கள், காய்கறிகளை உட்கொள்வார்சிகரெட் அறவே கிடையாதுஅவ்வப்போது கொஞ்சம் வொயின்தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி. இரவு 9 மணிக்கு மேல் எப்பேற்பட்டவர் எதிரில் இருந்தாலும் உறங்கச் சென்று விடுவார்’' என்றார் ராபர்ட்டின் நண்பர் மற்றும் கோச் கிரேர்ட் மிஸ்ட்லர்.
'ராபர்ட் டீவி பார்ப்பது குறைவு. நிறைய படிப்பார். இதனால் மனமும், உடலும் அலெர்ட்டாக இருக்கிறது. அவர் படிக்கும் போது ரீடிங் கண்ணாடிகளை அணிவார். இது தான் அவர் வயதானதற்கான சின்ன அறிகுறிஎன்று கலாய்க்கிறார் மற்றொரு நண்பரும் பயிற்சியாளருமான ஜேன் மிக்கேல் ரிச்ஃபோர்ட்.
'ராபர்ட்டின் இதயம், வழக்கத்துக்கு மாறானதாக இருக்கிறது. இவர் சைக்கிளிங் செய்யும் போது, இவரின் இதயம் தொடர்ந்து சீராக, நிமிடத்துக்கு 100 முறைக்கும் குறைவாகவே துடிக்கிறது. சொல்லப் போனால் அவர் இதயம் 60 வயதுக் காரரின் இதயம் போன்று இருக்கிறது' என்று பொறாமைப்படுகிறார் ஜேன் கோச். தினமும் சைக்கிளிங் மைதானத்தில் 10 - 20 கிலோ மீட்டர் சைக்கிளிங் மட்டும் தான் பயிற்சியாம். இதை எல்லாம் விட ஆச்சர்யம், அவர் தன் வாழ்நாளில், கண் பார்வைக்கானன 'கேட்ரேட்' அறுவை சிகிச்சை தவிர, வேறு எந்த ஆப்ரேஷனும் செய்ததில்லை.

"பார்த்தீர்களா நான் ஒரு சாம்பியன்என்னால் 105 வயதில் கூட, 1 மணி நேரத்துக்குள் 22.5 கிலோ மீட்டர் கடக்க முடிகிறது என்பதை காட்ட இங்கே வரவில்லை. 105 வயதுள்ள ஒரு கிழவனே சைக்கிள் ஓட்டுகிறான் என்பதை காட்டத் தான் இங்கு வந்தேன்'' என்று சில சொட்டு கண்ணீருடன், பொக்கைப் புன்னகை பூக்கிறார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top