காலாவதியான துப்பாக்கி வழக்கில்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலை



அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்து மான் வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு, ‘ஹம் சாத் சாத் ஹெய்ன்என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், சல்மான் கானுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்து 10-4-2006 அன்று தீர்ப்பளித்தது.
தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கடந்த 2007-ம் ஆண்டு சல்மான் கான் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றம் நடிகர் சல்மான்கானின் 5 ஆண்டு கால ஜெயில் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் அவர் ஜோத்பூர் பொலிஸாரிடம் சரண் அடைந்தார். 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் 6 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது.
பின்னர், ஜாமினில் விடுதலையான நடிகர் சல்மான்கான், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 9 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சல்மான் கானை விடுதலை செய்து உத்தரவிட்டது.
சல்மான் கான் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இதே மான் வேட்டை சம்பவத்தில் அனுமதி காலாவதியான துப்பாக்கியை வைத்திருந்ததாக ஜோத்பூர் மாவட்ட கோர்ட்டில் வனத்துறையினர் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் வாதப் பிரதிவாதங்கள் கடந்த 9-ம் திகதி நிறைவடைந்தது.
இதையடுத்து, இவ்வழக்கில் இன்று 18-ம் திகதி தீர்ப்பு அளிக்கப்படும் என ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் தல்பட் சிங் ராஜ்புரோஹித் அறிவித்திருந்தார். தீர்ப்பு வெளியாகும்போது சல்மான் கான் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதாலும், சல்மான் கான் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், கோர்ட் வளாகத்தை சுற்றிலும் ஏராளமான ஊடக நிருபர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் அப்பகுதியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணியளவில் சல்மான் கான் அவரது சகோதரி அல்விரா கான் ஆகியோர் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர், இவ்வழக்கில் சல்மான் கானை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
சல்மான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு வக்கீல்கள் தவறியதால் இந்த வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக தீர்ப்பின் நகல் கிடைத்தப்பின்னர் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என சல்மான் கானுக்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்த விஷ்னோயி சமாஜ் இயக்கத்தின் வழக்கறிஞர் நிரூபர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top