முடக்கிவைக்கப்பட்டிருக்கும் அரசி கையிருப்பு

விலை வீழ்ச்சியை அடுத்து சந்தைக்கு வரும்

அரிசியின் விலை மேலும் வீழ்ச்சியடையும்

- அமைச்சர் ராஜித சேனாரத்ன



விவசாயிகளின் எதிர்வரும் நெல் அறுவடைக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலேயே தற்போது அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனரத்ன தெரிவித்தார்.
அரிசியின் விலை சந்தையில் தற்பொழுது குறைவடைந்துள்ளது. இறக்குமதி அரிசி சந்தைக்கு வருவதை தொடர்ந்து விலை மேலும் வீழ்ச்சியடையுமென்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்பொழுது புறக்கோட்டை சந்தையில் 1கிலோ அரிசி 80 ரூபா தொடக்கம் 82 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அரிசி இறக்குமதியினால் விவசாயிகளின் எதிர்வரும் அறுவடைக்கு உரிய விலை கிடைக்காது என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வறட்சிக் காலநிலைக்கேற்ற உரிய நடவடிக்கையை அரசாங்கம் முன்கூட்டியே மேற்கொள்ளப்படவில்லை என்று செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வறட்சி தற்பொழுதே கொழும்பு போன்ற பிரதேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல் உற்பத்தி செய்யப்படும் பொலநறுவை போன்ற பிரதேசங்களில் பலமாதங்களுக்கு முன்னர் கடும் வறட்சி காலநிலை நிலவியது. இதனால் நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. உள்ளுர் பாவனைக்கு தேவையான அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாதவகையிலும் விவசாயிகளின் எதிர்வரும் நெல் அறுவடை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அரிசி இறக்குமதிக்கான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டது.
சில வர்த்தகர்களினால் முடக்கிவைக்கப்பட்டிருக்கும் அரசி கையிருப்பு விலை வீழ்ச்சியை அடுத்து சந்தைக்கு வரும். அப்பொழுது மேலும் அரிசியின் விலை வீழ்ச்சியடையும். பொதுமக்களின் நன்மைகருதியே நாம் அரிசி இறக்குமதியை மேற்கொண்டோம் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top