முஸ்லிம் பிரதிநிதிகள் ஒன்றுகூடினர்

அரசாங்கத்தின் மீது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்

முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினர்


வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி, வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமென அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில் மற்றும் தேசிய ஷூரா சபையினர் கலந்து கொண்ட கூட்டத்தில் கோரிக் விடுக்கப்பட்டது. மேலும், இதன்போது முக்கிய மூன்று தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது..

முஸ்லிம் நாாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் மகஜர் ஒன்றை கையளித்தல்

2012 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்கம் 1879/15 ஆம் இலக்க வர்த்தமானிப் பிரகடனத்தை ரத்துச் செய்யுமாறும், வில்பத்து விஸ்தரிக்கப்பட்டு வன ஜீவராசிகள் வலயமாக அந்தப் பிரதேசத்தை பிரகடனப்படுத்துவதென்ற ஜனாதிபதியின் அறிவிப்பை வாபஸ் பெறுமாறும் ஜனாதிபதியை கோருதல்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் முசலி மீள்குடியேற்றக் கிராமங்களை சென்று பார்வையிட்டு உண்மை நிலைகளை கண்டறிதல்.
ஆகியவையே அந்தத் தீர்மானங்களாகும்.

வில்பத்து சர்ச்சை தொடர்பான இந்தக் கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. இதில் முஸ்லிம் அமைச்சர்களான .எச்.எம். பௌஸி, எம்.எச். எம். ஹலீம், ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, ராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோருடன் ஜம்இய்யதுல் உலமா பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், தேசிய ஷூரா சபை பிரதித் தலைவர் ரீசா எஹியா, செயலகக் குழு உறுப்பினர் டொக்டர் ரியாஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் செயலாளர் நஜா முஹம்மட், வட மாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் முபாரக் மௌலவி உட்பட சட்டத்தரணிகள், கல்விமான்கள், துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.


ஆட்சியைக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய முஸ்லிம் சமூகம், இன்று கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்படுவதாகவும், இனவாதிகள் எங்கள் சமூகத்தை கொடூரமாக நிந்தித்து வருகின்ற போதும், தற்போதைய அரசு அதையொட்டி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருப்பது ஆரோக்கியமானதல்லதெனவும் அங்கு தெரிவிக்கப்பட்டதுநாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் புது வடிவில் விஸ்வரூபம் எடுத்து வருவதாகவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

முஸ்லிம் சமூகம் சட்டிக்குள் இருந்து, அடுப்புக்குள் விழுந்து விட்ட நிலையில் இருக்கின்றது. எமது பிரச்சினைகள் உயர் மட்டத்திற்கு பல்வேறு தடவைகள் எத்தி வைக்கப் பட்ட போதும், அது கருத்திற்கெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

26 வருடங்களுக்கு முன்னர் புலிகளால் வெளியேற்றப்பட்டு அகதியான ஒரு சமூகம், மீண்டும் தமது பிரதேசத்துக்குச் சென்று மூச்சு விடத்தொடங்கும் போது, வில்பத்து என்ற கோஷத்தைக் கையிலெடுத்து இனவாதிகள் கூப்பாடு போடுகின்றனர். எங்களை நிம்மதியாக வாழ விடுகிறார்கள் இல்லை.

இனவாத ஊடகவியலாளர்களும் இனவாத சூழலியலாளர்களும் தினமும் நவீன புகைப்படக்கருவிகளை காவிக் கொண்டு ஹெலிகொப்டரில் எமது பிரதேசத்துக்கு மேலாக பறந்து ரோந்து புரிகின்றனர். யுத்தகாலத்தைப் போன்ற ஒரு பய உணர்வில் நாங்கள் காலத்தைக் கழிக்கின்றோம். பிரபாகரனின் ஆயுதக் கொடூரத்தை விட நல்லாட்சியினால் வெளியிடப்படவுள்ள வர்த்தமானிப் பிரகடனம் வடக்கு முஸ்லிம் சமூகத்தை நிரந்தரமான அகதிகளாக மாற்றி விடுமோ என்ற அச்ச உணர்வு எமக்கு ஏற்பட்டுள்ளதுஎன்று, முசலிப் பிரதேசத்திலிருந்து வந்த பள்ளிவாசல் சங்க நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் இதன்போது கவலை வெளியிட்டனர்.

வர்த்தமானிப் பிரகடன அறிவிப்பு மிகவும் ஆபத்தானது. எனவே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்பிக்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து, வில்பத்து விடயம் உட்பட ஏனைய முஸ்லிம்களை நிர்க்கதியாக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தமது அரசியல் பலத்தை பிரயோகித்து எங்களுக்கு விமோசனம் பெற்றுத்தாருங்கள்என்ற குரல்களும் அங்கு ஓங்கி ஒலித்தன.

சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த அனைத்து அமைப்புகளும், முஸ்லிம் எம்பிக்களுடன் கை கோர்த்துச் செயற்பட்டு எமது பிரச்சினைகளை வென்றெடுக்க அழுத்த வழங்க வேண்டும்.


ஜனாதிபதியையும் பிரதமரையும் அவசரமாக சந்திப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு பெற்றுத்தாருங்கள், இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினை வேறு வடிவில் மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. கடந்த காலம் எல்லோருக்கும் தக்க பாடமாக அமைய வேண்டும்எனவும் அங்கு பிரசன்னமாயிருந்த புத்திஜீவிகள் அழுத்தமாகத் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top