மீட்கப்பட்ட மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை

கல்முனையைச் சேர்ந்த 06  மீனவர்களுடன் கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி மீன்பிடித் தொழிலுக்காக ஒலுவில் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற 2 இயந்திரப் படகுகள் காணாமல் போயின.  அவற்றில் ஒன்று 2 மீனவர்களுடன் மாலைதீவுக் கடற்படையினரால் பாதுகாப்பாக  மீட்கப்பட்டதுடன், அவ்விரு மீனவர்களும் மாலைதீவுத் துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  
இரண்டு இயந்திரப் படகுகளில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போயுள்ள கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் பற்றி பலவாறான தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. படகுகள் இரண்டும் அவற்றில் பயணித்த 6 மீனவர்களும் மாலை தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் என்ற ஆதாரபூர்வமற்றதும், ஊர்ஜிதமற்றதுமான செய்தியொன்றும் பரப்பப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புச் செயலாளர் கருணா சேன ஹெட்டியாராய்ச்சி கடற்படை தளபதி ரவீந்திர சீ விஜேகுணரத்தின
மலைத்தீவு குடியரசில் உள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் டபிள்யு. ஜி.என்.எச். டயஸ் மற்றும் இங்குள்ள மலைதீவு உயர்ஸ்தானிகர் திருமதி. ஸாஹியா ஸரீப் ஆகியோர்கள் தெரிவித்துள்ள தகவல்களின்படி,
மாலைதீவு கடற்படையினரால் ஒரு படகும் அதில் இருந்த இரு மீனவர்களும் மட்டுமே மீட்கப்பட்டு தற்போது மாலைத்தீவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். மற்றைய படகும் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் மாலை தீவு, இலங்கை ஆகியவற்றின் கடற்படையினரும், விமானப்படையினரும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை, மாலைத்தீவு, தேடுதல் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக இந்திய கடற்படையினரையும், விமானப்படையினரையும் அவர்களின் கடற்பரப்பிலும் தேடுதல்களை நடாத்த பாதுகாப்பு செயலாளரும் கடற்படை தளபதியும் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படை தளபதியின் தகவலின்படி இம்மீனவர்கள் பொருத்தமான தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஆழ்கடலுக்கு சென்றதனாலேயே பிரச்சினை உருவாகியுள்ளது. இலங்கை, மாலைத்தீவு கடற்பரப்புகளிலும் அதற்கு அப்பாலும் பயணித்துக்கொண்டிருக்கின்ற கப்பல்கள், வான் எல்லையில் பறந்துகொண்டிருக்கும் விமானங்கள் என்பனவற்றுக்கு இது சம்பந்தமான SOS கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படகில் மூன்று மீனவர்கள் சென்ற போதிலும் நடுக்கடலுக்கு அப்பால் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் மற்றைய படகிலுள்ள மீனவர்களுக்கு உதவுவதற்காக அப்துல் வாஹித் எனும் மீனவர் அதில் ஏறியதாகவும் பின்னர் அப்படகு வேறு திசை நோக்கி  நகர்ந்து சென்று விட்டதாகவும் மீட்கப்பட்ட படகில் இருந்த இரு மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.
 .பி.ஹாஜா முஹைதீன், எம்.எம்.அர்ஜில் ஆகிய இருவருமே மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மீனவர்களாவர்.

கே.எம்.நஸீருத்தீன், .எம்.அலாவுதீன், எம்.எம்.வாஹிதீன், அப்துல் வாஹித் ஆகிய நான்கு மீனவர்களும் மற்றொரு படகில் உயிருடன் நல்ல நிலையில் இருப்பதாகவும் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும் காப்பாற்றப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top