அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல்?
அட்டாளைச்சேனை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள் கடுமையாக வலியுறுத்திய போதும், அது குறித்து முஸ்லிம் காங்கிர்ஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எதுவும் கூறாமல் மௌமாக இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடையாது என்பதை ஹக்கீம் – தன்னுடைய மௌத்தின் வழியாக உறுதிப்படுத்தி விட்டார் எனக் கூறப்படுகிறது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம், நேற்று முன்தினம், கட்சியின் கொழும்புத் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.
இதன்போது, அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்பதை அந்தப் பிரதேசத்தின் கட்சிப் பிரமுகர்களான எஸ்.எல்.எம். பளீல், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், யு.எல் வாஹிட், கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனைபிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எல். நபீல் உள்ளிட்டோர் வலியுறுத்திப் பேசினர்.
‘அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் வழங்குவேன் என்று மிகவும் பகிரங்கமாக கடந்த காலங்களில் வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். ஆனாலும் இப்போது பொதுச் செயலாளர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அதற்குக் காரணம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக ஹசனலிக்கும் நீங்கள் வாக்களித்ததாக சொல்கிறீர்கள். அப்படியாயின் அட்டாளைச்சேனைக்கு எப்போதாவது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா என்று கூறுங்கள். அதுவும் இல்லாது விட்டால் அட்டாளைச்சேனைக்கு வழங்க முடியாது என்றால், அதையாவது வெளிப்படையாகக் கூறுங்கள். அந்த ஊர் மக்களிடம் நாங்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டியுள்ளது’ என்று, முஸ்லிம் காங்கிர்ஸ் தலைவரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் உயர்பீடத்தில் வைத்து கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும், முஸ்லிம் காங்கிர்ஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்கு எவ்வித பதிலையும் வழங்காமல் மௌனமாகவே இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிர்ஸ் தலைவரின் மௌனத்தை வைத்து, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அவர் வழங்க மாட்டார் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்று, உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அப்பிரதேசத்தை சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் முன்வைத்தார்கள். அதில் பளீல் பிஏ அவர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு மிகவும் காரசாரமாக தனது கருத்தினை முன்வைத்தார்.
அதேபோன்று வன்னி மாவட்டத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வன்னியை சேர்ந்தவர்களும், மற்றும் ஓட்டமாவடி, கம்பஹா, குருநாகல் என ஒவ்வொரு பிரதேசத்தை சேர்ந்தவர்களும் தங்களது பிரதேசத்துக்கே தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்றும், அதற்கான நியாயங்களையும் முன்வைத்தார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவைகள் ஒருபுறமிருக்க கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்பட்டது.
கடந்த அதியுயர்பீட கூட்டத்தில் நடைபெற்ற விடயத்தினையும், தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்தபோது அங்கு நடைபெற்றவைகளையும் கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களால் விளக்கப்பட்டது.
அதில் தனக்கு தேசியப்பட்டியல் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலைவருடன் முரண்பட்டிருந்த ஹசனலி அவர்களை சந்தித்து அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஹசனலியுடன் தலைவர் பேசவேண்டும் என்ற தீர்மானம் கடந்த அதியுயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த அனைத்து அதியுயர்பீட உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தார்கள். அப்போது எந்தவொரு உறுப்பினரும் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு இப்போது போர்க்கொடி தூக்குவதில் எந்தவித நியாயமும் இல்லை என்று சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் விளங்கப்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கட்சியையும், தலைவரையும் இக்கட்டான நிலைக்கு தள்ளுகின்ற விடயத்தினை பற்றி மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ ரஸ்ஸாக் ( ஜவாத் )அவர்கள் பேசியபோது ஜவாதுக்கும், அட்டாளைச்சேனை பளீல் பி.ஏ அவர்களுக்குமிடையில் சிறுது வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பின்பு கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் கண்டியில் தலைவர் ஹக்கீமை தோற்கடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும், மற்றும் வடமாகானசபை தேர்தலிலும், கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸை தோற்கடிப்பதற்கு கட்சியின் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு நடத்திய நாடகம் பற்றியும் பேசப்பட்டதொடு அப்போது பசீர் சேகுதாவூதை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்குவதற்கு தலைவர் முடிவெடுத்தபோது அதற்கு எதிராக செயல்பட்டவர்தான் ஹசனலி என்ற பலவிடயங்கள் அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக கட்சியின் சம்பிரதாயப்படி தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை யாருக்கு எப்போது வழங்க வேண்டும் என்ற முடிவினை தலைவரே தீர்மானிப்பார் என்று தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இன்னும் ஆறுமாதம் சென்றபின்பும் பேராளர் மாநாட்டினை நடாத்த முடியும் ஆனாலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி ஆயிரம் பேர்கள் கொண்ட பேராளர் மாநாட்டினை கொழும்பில் நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இரவு 11.3௦ மணிக்கு அதியுயர்பீடக்கூட்டம் முடிவடைந்தது.
0 comments:
Post a Comment