தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை

ரஜினி திரைப்படத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும்

இலங்கைக்கு செல்ல வேண்டாம்...!

தொல். திருமாவளவன் வேண்டுகோள்


இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், இலங்கைக்குச் செல்ல வேண்டாம்என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை 350 கோடி ரூபா செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் 22 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகளை, தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளார்.

வவுனியாவின் சின்ன அடம்பன் கிராமம், புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாக, ஞானம் அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது.

குறித்த வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி, எதிர்வரும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு வீடுகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து தொல். திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில், "இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, இலங்கைக்குச் செல்லவேண்டாம்.

லைக்காவுடனான தனது நட்பை திரைப்படத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும். இன அரசியல் சர்ச்சையில் ரஜினி சிக்கிக்கொள்ள வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நடிகர் ரஜினியை வைத்து லைக்கா நிறுவனம், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top