சமூகம் என்று வருகின்றபோது பதவிகளை

தூக்கி வீசி விட்டு மக்களுடன் களமிறங்க

அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும்

சம்பந்தன் ஐயாவும் கருணைப் பார்வையை செலுத்த வேண்டும்

-    ஏ.எம்.ஜெமீல்


முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை அரபு, முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான .எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
முசலிப் பிரதேச முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
"கடந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின்போது சிங்கள பேரின சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியதன் காரணமாகவே அவரை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்கு முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்தமாக அணி திரண்டிருந்தது.
அதேவேளை கடந்த ஜானாதிபதித் தேர்தலில், பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மீது முஸ்லிம் மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்து, எவ்வித நிபந்தனையுமின்றி அவரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.
ஆனால் அந்த நம்பிக்கை அனைத்தையும் வீணடிக்கும் வகையில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மைத்திரி ஆட்சியிலும் தொடர்வதானது எம்மை கவலையடையச் செய்கிறது.
முசலி என்பது முஸ்லிம்களின் பூர்வீகப் பிரதேசம் என்பதை மறுதலித்து, அதனை வில்பத்து வனப் பகுதியுடன் இணைக்கும் வர்த்தமானி பிரகடனத்தை ஜனாதிபதி வெளியிட்டிருப்பதானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதொரு நடவடிக்கையாகும்.
பேரின சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொடுத்த ஒரு சமூகத்தை காலில் போட்டு மிதிப்பதற்கு மைத்திரி துணிந்திருப்பதானது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் வடக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நீண்ட காலக் கனவுடன் தமது சொந்த மண்ணில் மீள்குடியேறுவதற்காக அங்கலாய்க்கின்ற தருணத்தில் இப்படியொரு அநியாயம் முசலிப் பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகையினால் வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படும் வரை இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் முசலிப் பகுதி மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராக வேண்டும்.
சில இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம்.
இது வரவேற்கப்பட வேண்டிய செயற்பாடாகும். அதில் நமது மக்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்று, எமது ஒற்றுமையையும் சக்தியையும் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.
தமது காணி உரிமைக்காக கேப்பாப்பலவு மக்கள் 29 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டமும் அதற்கு ஆதரவாக வடக்கு - கிழக்கில் அனைத்து தமிழ் பகுதிகளிலும் மக்கள் ஒன்றிணைந்து ஆதரவுப் பேரணிகளை நடத்தியதையும் முஸ்லிம்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
இது தவிர முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் முசலி விடயத்தில் கூட்டாக செயற்பட்டு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்விடயத்தில், முஸ்லிம்களின் நியாயத்தை புரிந்து கொண்டு, விட்டுக்கொடுப்புடன் செயற்பட ஜனாதிபதி முன்வரா விட்டால் அரபு, முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் (OIC) உதவியை நாடுவோம்.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போனபோது எனது ஏற்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தூதுக்கு குழுவொன்று இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் தலைவர்களை சவூதி அரேபியாவில் சந்தித்து முறையிட்டது.
அதன் பேரில் அந்த அமைப்பின் அழுத்தம் மஹிந்த அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட்டதையும் முஸ்லிம் நாடுகளின் நல்லெண்ணெத்தை இழக்க நேரிட்டதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
சமூகம் என்று வருகின்றபோது பதவிகளை தூக்கி வீசி விட்டு மக்களுடன் களமிறங்க அரசியல் தலைமைகள் தயாராக வேண்டும்.
எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனைப் பொறுத்தளவில், கடந்த ஜானாதிபதித் தேர்தலின்போது பதவியை மட்டுமல்ல உயிரையும் துச்சமாக மதித்தே மஹிந்த ராஜபக்ஸவை வீட்டுக்கனுப்பும் போராட்டத்தில் குதித்து, தனது நேர்மையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய ஒரு தேசிய தலைவராவார்.
அத்தகையதொரு தலைவர் வழியில் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் இத்தருணத்தில் சமூகத்திற்காக தம்மை அர்ப்பணிக்க முன்வர வேண்டும்.
வில்பத்து மற்றும் முசலி விவகாரம் ரிஷாத் பதியுதீனின் சொந்தப பிரச்சினை என்று கூறிக் கொண்டு, தூர நிற்காமல், அது ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிம் அகதிச் சமூகத்தின் வாழ்விடப் பிரச்சினை என்பதைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும் முசலி மக்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றேன்.

அது மாத்திரமல்லாமல் இந்நாட்டு மக்கள் அனைவருக்குமான ஓர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் சாத்வீகப் போராட்டத் தலைமை என்ற வகையிலும் இரா சம்பந்தனும் தனது கருணைப் பார்வையை செலுத்த முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்"இவ்வாறு .எம்.ஜெமீல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top