முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு ஒன்றிணையுங்கள் 
:
அல் ஹாஜ் ஹுதா உமர் முஸ்லிம் எம்பிக்களுக்கு அழைப்பு



எமது நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைக்க எமது மக்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்து இலங்கை தாய்நாட்டில் தற்போதைய சூழ்நிலையை நோக்குகின்ற போது மிகவும் கவலையாக உள்ளது.பல வருடங்களாக தமது சொந்த நிலத்தை பறிகொடுத்துவிட்டு இரவோடு இரவாக தமது சொத்துக்களையும் பூர்விக நிலங்களையும் திறந்து அநாதை அகதிகளாக மாறிவிட்ட எமது வட மாகாண தமிழ் பேசும் மக்களின் இன்றைய நிலையை எண்ணிப்பார்க்கின்ற போது மிக கவலையாக இருக்கின்றது என்பது சகலரும் அறிந்த உண்மையே.
முஸ்லிம் மக்களின் சமய,சமூக,பொருளாதார விடயங்களில் மஹிந்த அரசு சில இனவாத பேரினவாதிகளை கட்டவிழ்த்து விட்டது எனும் ( மஹிந்த அரசின் முகவர்கள் என நிரூபிக்கப்படாத ) குற்றசாட்டை சுமத்தி நாட்டை பாரிய அபிவிருத்திப் பாதையில் சென்ற மஹிந்த அரசை கவிழ்த்து தற்போதைய ஆட்சியை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களே !! . இன்றைய சூழ்நிலையில் பார்க்கின்ற போது கடும் இன்னல்களை அனுபவிப்பதும் அவர்களே என்பதுதான் உண்மை.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் இரவுபகலாக இந்த வடகிழக்கில் பல கூட்டங்களையும் மாநாடுகளையும் கூட்டி எமது அரசியல் வாதிகள் தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா ?? என்ற கேள்விக்கு விடை தேடினால் பெரிய வினாக்குறியே பதிலாக உள்ளது. நாட்டுக்கு வெளியே இராஜதந்திர பயணத்தில் இருந்த ஜனாதிபதி அவசர அவசரமாக முஸ்லீம் மக்களின் சொத்துக்களையும், நிலங்களையும், பள்ளிவாசல்களையும் காடாக மாற்ற அனுமதி வழங்குகிறார் என்றால் அவர் இந்த முஸ்லீம் மக்கள் மீதும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதும் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் மீதும் எவ்வளவு நன்மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை இங்கு கவனிக்கக்கூடியதாக உள்ளது.
இந்த நல்லாட்சியில் இடம்பெறும் கொடுமைகளையும்,அதிகார துஸ்பிரயோகங்களையும் தட்டிக் கேட்க மிக ஆளுமையுள்ள தலைமை இல்லாது முஸ்லீம் சமூகம் தத்தளிப்பதை இங்கு காணக்கூடியதாக உள்ளது. இந்த அரசினை ஆதரிக்க கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டதால் சகலரும் பல்லுப்புடுங்கிய பாம்பாக அடங்கியுள்ளார்கள். இந்த வில்பத்து, மரிசிக்கட்டி, கரட்டிக்குளம் மக்களின் பிரச்சினையை மக்கள் மயப்படுத்தி தீர்வைப்பெற அமைச்சர் றிசாத்தும் இன்னும் சில பொதுநல அமைப்புக்களும் எத்தணித்தபோது அதனை அரசியல் நாடகம் என புறக்கணித்துவிட்டு இப்போது தலைமேல் கைவைத்து இருக்கும் நிலைக்கு நமது சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
நல்லாட்சி எனும் பெயரில் எமது நாட்டில் இடம்பெறும் இந்த ஆட்சியில் மக்கள் நசுக்கப்படுகின்ற போது அதனை தட்டிக்கேட்கின்ற அரசியல் தலைமையாக எமது அரசியல் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எமது மக்களின் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் உட்கட்சி பூசல்கள்,அரசியல் போட்டிகள்,அபாண்ட குற்றசாட்டுக்கள்,என்பதை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளில் உங்களின் கவனங்களை செலுத்த முன்வரவேண்டும் என்பதை சகல கட்சி அரசியல் பிரமுகர்களிடமும் வேண்டிக்கொள்கிறேன்.
பாராளுமன்ற ஆசனங்களை சூடாக்கிவிட்டு சுகபோகங்களை அனுபவிக்க மக்கள் உங்களை பாராளுமன்றம், மாகாணசபைகளுக்கு அனுப்பவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?? இறைவனின் கேள்விக்கணக்கின் போது உங்களிடம் தரப்பட்டிருக்கும் இந்த அமானிதத்திற்க்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் நாடுபூராகவும் பல பல வடிவங்களில் நிரம்பிக்கிடக்கிறது,அதிலும் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் அதிக பிரச்சினைகள் இருப்பதை சகல கட்சிகளும் அறிந்தும் மக்களிடம் வாக்குப்பெருவதற்க்கும்,தேசிய தலைமையாக அடையாளம் கட்டுவதற்க்கு படம் காட்டி ஏமாற்றுவதையே குறியாக கொண்டுள்ளதை இனியாவது நிறுத்தி கட்சி பேதம் ,பிரதேச வாதம் ,தலைமைத்துவ மாமதைகளை திறந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க போராட முன்வருமாறு சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் இலங்கை முஸ்லீம் உம்மத்தின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.என்றும்

ஜனாதிபதியால் வனமாக பிரகடனப்படுத்தி கையெழுத்திடப்பட்டிருக்கும் மரிசிக்கட்டி,கரடிக்குள பிரதேச பிரச்சினையின் உண்மை நிலையையும்,அந்த மக்களின் பிரச்சினைகளையும் உரிய தரப்புக்களுக்கும்,அரசுக்கும் எடுத்துக்கூறி அந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறசெய்வதுடன் மக்களின் காணிப்பிரசினைகள், நுரைசோலை வீட்டுத்திட்டம் மக்களிடம் கையளித்தல்,போன்ற இன்னோரன்ன முக்கிய பிரச்சினைகளுக்கு ஒருமித்த குரலாக ஒலிக்க சகல அரசியல் வாதிகளையும் புனித இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்துடனும்,புரிந்து ணர்வுடனும்,ஒற்றுமைப்பட்டு செயலாற்ற அழைப்பு விடுக்கிறேன் என இலங்கை உலமா கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரும் அல் மீஸான் பௌண்டஷன் தலைவருமான அல் ஹாஜ் ஹுதா உமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top