சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு

பொருத்தமான வலயக்கல்விப் பணிப்பாளரை

மூன்று வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாத

கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு

(அஸ்லம்)

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக பொருத்தமானதொரு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியை மூன்று வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாத கையறு நிலையில் இருப்பதாகவும், இதன் காரணமாக கடமையிலுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை சிரேஸ்ட அதிகாரிகள் பாதிக்கப்படுவதாகவும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளதாக அதன் செயலாளர் .எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்திற்காக 2014ம் ஆண்டு நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் மூவர் தோற்றி கூடுதலான புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில் அரசியல் மற்றும் தனிப்பட்ட செல்வாக்குக் காரணமாக இலங்கை கல்வி நிருவாக சேவை மூன்றாம் வகுப்பு விசேட ஆளணி விவசாய பாடத்திற்குரிய ஒருவர் விதிமுறைகளுக்கப்பால் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளராக Cover-up duty  அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்.

இவருக்கு நியமனம் வழங்கும்போது வழங்கப்பட்ட கடிதத்தில் பொருத்தமான உத்தியோகத்தர் நியமிக்கப்படும் வரை எனக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. Cover-up duty அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட ஒருவர் அரச தாபன விதிக்கோவை மற்றும் பொது நிருவாக அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைய ஆகக்கூடியது 03 மாதகாலம் அப்பதவியை வகிக்க முடியும். ஆனால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழு தான் எடுத்த பிழையான முடிவை நியாயப்படுத்துவதற்காக இவரை 03 வருடங்களாக பதவியில் வைத்துக் கொண்டிருக்கிறது. 03 வருடங்களாகியும் கிழக்கு மாகாணத்தில் பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் கண்ணை மூடிக்கொண்டு இருந்து வருகிறது.

அண்மையில் அரச சேவை ஆணைக்குழு கிழக்கு மாகாண ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு உத்தியோத்தர்களையே நியமிக்க வேண்டுமென கேட்டுள்ளது. அந்த அடிப்படையில் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் அப்பதவிக்கு நியமிக்கப்பட முடியாது. இதன் காரணமாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் அந்நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை.

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கடிதத்திற்கேற்ப கல்குடா கல்வி வலயத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்ட போது இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுக் கோரப்பட்டுள்ளது. ஆனால் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய தகுதியான உத்தியோகத்தர் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் இதன்மூலம் சேவையிலுள்ள இரண்டாம் வகுப்பு உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

(கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top